பிரதமர் மோடி நாளை காலை 10.20 மணிக்கு தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அவர் ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார். இதற்காக ஶ்ரீரங்கம் யாத்திரை நிவாஸ் எதிரே உள்ள ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ஹெலிபேடு அமைக்கும் பணி 2 நாட்களாக நடந்தது. இன்று ஹெலிபேடு தயாராகி விட்டது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமர் ஹெலிபேடில் இருந்து கோயிலுக்கு செல்வதற்காக குண்டு துளைக்காத காரில் பயணிக்கிறார். இந்த கார் டில்லியில் இருந்து கொண்டு வரப்பட்டு ஶ்ரீரங்கத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது. அத்துடன் பிரதமருடன் பயணிக்கும் முக்கிய பிரமுகர்கள், அதிகாரிகள் செல்லும் காரும் அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அந்த கார்களும் போலீஸ் கண்காணிப்புக்கு மத்தியில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
நாளை காலை 11 மணிக்கு ரெங்கநாதர் கோயிலுக்கு வரும் பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. அனைத்து சந்நிதிகளுக்கும் சென்று அவர் தரிசனம் செய்கிறார். அத்துடன் கம்பராமாயணம்
அரங்கேற்றம் செய்யப்பட்ட மண்டபம் ரெங்கநாதர் கோயில் வளாகத்தில் உள்ளது. அங்கு தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாடுகிறார்கள். அதை பிரதமர் மோடி கேட்கிறார். அத்துடன் தமிழறிஞர்களுடன் சேர்ந்து கம்பராமாயண பாராயணமும் செய்கிறார்.
இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் ராமேஸ்வரம் புறப்படும் பிரதமர் மோடி, மதியம் 2.10 மணிக்கு ராமநாதசாமி கோயிலை அடைகிறார். மதியம் 2.45 முதல் 3.30 மணி வரை ராமநாதசாமி கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார்.
அன்ற இரவு ராமேஸ்வரத்திலேயே தங்கும் பிரதமர் மோடி, மறுநாள்(ஞாயிறு) காலை, மீண்டும் ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக அரிச்சல் முனை மற்றும் கோதண்டராமசாமி கோயிலுக்கு பிரதமர் மோடி செல்கிறார். கோதண்டராமசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து விட்டு, சுமார் 11 மணி அளவில் விமானம் மூலம் மதுரை புறப்படும் பிரதமர் மோடி, அங்கிருந்து டில்லிக்கு செல்கிறார்.