திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கோவை செட்டிப்பாளையத்தில் நேற்ற இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
தேர்தல் பத்திரம் கொண்டுவந்து ஊழலை சட்டப்பூர்வமாக்கியது பாஜகதான். அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகிய கூட்டணி அமைப்புகள் மூலம் சோதனைசெய்து மிரட்டி நிதியை பறித்தது பாஜக. சிஏஜி-யில் கூறப்பட்ட ரூ.7 லட்சம் கோடி ஊழல், ரஃபேல் ஊழல் குறித்து கேட்டால், இதுவரை வாய் திறக்கவில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களின் பல ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கறுப்பு பணத்தை ஒழிப்பதாக செய்த பணமதிப்பு இழப்பு நடவடிக்கையால் ஏழைகளின் பணம் பறிக்கப்பட்டது. இதனால், பணப் புழக்கம் குறைந்து தொழில் முடங்கியது. ஜிஎஸ்டி வந்ததால் முதலாளிகள், கடனாளிகள் ஆனார்கள். வங்கதேசத்துடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தால் நூலும், துணியும் முடங்கின. 35 சதவீத மில்கள் மூடவேண்டிய நிலையில் உள்ளன.
தமிழகத்துக்கு வரும் வளர்ச்சி திட்டங்களை திமுக தடுப்பதாக பிரதமர் மோடி கூறியது வடிகட்டிய பொய். தமிழகத்தை சேர்ந்த தொழில் நிறுவனம் ரூ.6,500 கோடி முதலீட்டில் வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டத்தை கோவையில் தொடங்க முடிவானது. இதற்கான எல்லா வேலைகளையும் முடித்து விட்டோம். இந்த நிலையில் அந்த நிறுவனத்தினரை மிரட்டி தொழில் திட்டத்தை குஜராத்துக்கு மாற்றிவிட்டனர். இதுதான் கோவை மீதான பாஜகவின் போலி பாசம். செமிகண்டக்டர் திட்டத்தை, மிரட்டி குஜராத்துக்கு மடை மாற்றியது பாஜக. கோவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது பாஜகவுக்கு பிடிக்கவில்லை.
கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமைச்சர்கள் முத்துசாமி, சக்கரபாணி, மு.பெ.சாமிநாதன்,டிஆர்பி ராஜா, கயல்விழி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா எம்.பி. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.