ரஷ்ய சென்றுள்ள பிரதமர் மோடி, தலைநகர் மாஸ்கோவில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். ரஷ்ய மொழியில் இந்தியர்களை வரவேற்று உரையை தொடங்கிய பிரதமர் மோடி பேசியதாவது:
ரஷ்ய வாழ் இந்தியர்களின் அன்பான வரவேற்புக்கு நன்றி. நான் தனியாக வரவில்லை, என்னுடன் நிறைய கொண்டு வந்துள்ளேன். இந்திய மண்ணின் நறுமணத்தை என்னுடன் கொண்டு வந்துள்ளேன். 140 கோடி இந்தியர்களின் அன்பை பகிர்ந்துகொள்ள ரஷ்யா வந்திருக்கிறேன்.
இன்று ஜூலை 9, நான் பதவியேற்று ஒரு மாதம் ஆகிறது. இன்று சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு, நான் இந்தியாவின் பிரதமராக பதவியேற்றேன். இந்தியாவை 3வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதே எனது இலக்கு. 3 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனது 3வது பதவிக்காலத்தில் 3 கோடி மகளிரை லட்சாதிபதிகளாக்க உறுதியேற்றிருக்கிறோம். இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் என் இந்திய சகோதர சகோதரிகள் உங்கள் தாய்நாட்டின் சாதனைகளை நினைத்து பெருமை கொள்கிறார்கள். இன்றைய இந்தியா எந்த இலக்கை நிர்ணயித்தாலும் அதை எப்பொழுதும் அடைகிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.
உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவுக்கு சந்திராயன் அனுப்பிய நாடு இன்று இந்தியா. டிஜிட்டல் மயமாக்கப்பட்ட நாடுகளில், நமது பாரத நாடு, உலகளவில் முதன்மை இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் லட்சக்கணக்கான ஸ்டார்ட் அப் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் மூன்று கோடி ஏழைகளுக்கு வீடு கட்டி தரப்பட உள்ளது. சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றும் நாடாக இந்தியா திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலகம் வியப்படைந்துள்ளது. உங்களைப் போன்றவர்கள் எங்களை ஆசீர்வதித்தால், மிகப்பெரிய இலக்குகளை கூட அடைய முடியும்.
இந்தியா மாற்றத்தை நோக்கி செல்வதாக அனைவரும் கூறுகிறார்கள். டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 40,000 கி.மீ ரயில் பாதை மின்சார வழித்தடமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் அமைப்பு மற்றும் உள்கட்டமைப்பில் மட்டுமல்ல, நாட்டின் ஒவ்வொரு குடிமகன் மற்றும் ஒவ்வொரு இளைஞர்களின் தன்னம்பிக்கையிலும் இந்த மாற்றம் தெரியும். 2014க்கு முன், நாங்கள் விரக்தியின் குழிக்குள் மூழ்கியிருந்தோம். ஆனால் இன்று நாடு முழு நம்பிக்கையுடன் உள்ளது. சமீபத்தில் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்றதை நீங்களும் கொண்டாடியிருப்பீர்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.