18வது மக்களவையின் எதிர்க்கட்சித்லைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து பேசினார். அவர் ஆற்றிய உரையால் பாஜக எம்.பிக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராகுல் பேச்சுக்கு பிரதமர், அமைச்சர்கள், எம்.பிக்கள் குறுக்கீடுகள் செய்தும் , ராகுல் 100 நிமிடங்கள் பேசினார்.
இன்று மாலை பிரதமர் மோடி மக்களவையில் உரையாற்ற உள்ளார். நேற்று ராகுல் பேச்சுக்கு பாஜக செய்த இடையூறு போல இன்று காங்கிரசாரும் மோடி பேச்சுக்கு இடையூறு செய்ய வாய்ப்பு உள்ளது. இதை பாஜக எப்படி சமாளிக்கப்போகிறது என்பது இன்று மாலை தெரியும்.
இந்த பிரச்னை குறித்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்.பிக்களின் ஆலோசனை கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அவர் பேசியதாவது:
நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள். தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் மக்களின் நலனுக்காக பாடுபடவேண்டும். தேநீர் விற்றவர் எப்படி 3-வது முறையாகபிரதமராகலாம் என காங்கிரஸ் கருதுகிறது. பா.ஜனதா கூட்டணியின் வெற்றியை ஏற்க முடியாமல் காங்கிரஸ் தவிக்கிறது.
மக்களவையில் ராகுல்காந்தி போல் செயல்படாதீர்கள். தகவல்களை சரிபார்த்து பேசவும், ஊடகங்களில் தேவையற்ற விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். நாடாளுமன்ற மரபுகள் மற்றும் விதிகளை பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்கள் பிரதமரின் வழிகாட்டுதல்படி செயல்படுவதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வந்த தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டம் நிறைவடைந்தது.