சென்னை பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை நடந்த விழாவில் தாம்பரம்-செங்கோட்டை அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை, திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே பயணிகள் ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: புதிய நம்பிக்கை எதிர்பார்ப்புகளுக்கான தொடக்கம் இது. கட்டமைப்பு துறையில் புரட்சிகரமான வளர்ச்சியை நாடு கண்டுள்ளது. நாட்டின் கட்டமைப்புக்காக ரூ.10 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை விட 5 மடங்கு அதிகம். 2014க்கு பிறகு தமிழகத்தில் துறைமுகங்கள் இரு மடங்காக உயர்ந்துள்ளது. 2014க்கு முன் ஆண்டுக்கு 600 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டது. இப்போது 4,000 கிமீ பாதை மின்மயமாக்கப்படுகிறது. 74 ஆக இருந்த விமான நிலையங்கள் 150 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் அரசு மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 380ல் இருந்து 660 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை 3 மடங்கு உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் உலகளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வரிப்பணம் முறையாக செலவிடப்பட வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு. 2 லட்சம் கிராமங்களுக்கு இணையதள வசதி வழங்கப்பட்டுள்ளது. வந்தே பாரத் ரயில் சேவை சிறுதொழில்களை வாடிக்கையாளர்களுடன் இணைக்கிறது. ஒரு திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், மக்களின் வாழ்க்கை வேகம் பெறுகிறது. 2,000 கிமீ தூரத்துக்கு தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டுள்ளன. கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு சில முக்கிய திட்டங்களை பெற்றுள்ளது. தமிழ்நாடு ஜவுளித்துறையில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. புதிய திட்டங்களால் சென்னை, மதுரை, கோவை நகரங்கள் வளர்ச்சி பெறும். தொழில்களின் சக்தி பீடமாக கோவை விளங்குகிறது. இவ்வாறு பேசினார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய, மாநில அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.