Skip to content
Home » அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

அரசு நடத்த பெரும்பான்மை தேவையில்லை….என்டிஏ தலைவரான மோடி பேச்சு

பாஜக அரசு வரும் 9ம் தேதி் மூன்றாம் முறையாக பதவி ஏற்கிறது. இதையொட்டி பா.ஜனதா உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் புதிய எம்.பி.க்கள் , முக்கிய தலைவர்கள் கூட்டம்  டில்லியில் நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை)  காலை 11.30 மணிக்கு தொடங்கியது.  மேடையில் மோடி,  சந்திரபாபு நாயுடு,  நிதிஷ்குமார்,   ராஜ்நாத்சிங், அமித்ஷா,  நட்டா, பவன் கல்யாண் ஆகியோர்  அமர்ந்திருந்தனர்.

இந்த கூட்டத்தில்  தமிழகத்தை சேர்ந்த ஜிகே. வாசன்,  ஓபிஎஸ்,  பாஜக தலைவர் அண்ணாமலை, எல். முருகன் ஆகியோர்  கலந்து கொண்டார். இவர்கள்  புதிய எம்பிக்கள் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.

கூட்டம் தொடங்கியதும்  அமைச்சர் ராஜ்நாத்சிங்,  பிரதமர் பதவிக்கு மோடி பெயரை முன்மொழிந்தார்.  அதை வழிமொழிந்து அமித்ஷா,  நிதின் கட்கரி, சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்  உள்ளிட்டோர்  பேசினர். மோடியின் சாதனைகளை புகழ்ந்து பேசி அவரை பிரதமராக தேர்வு செய்ய தங்கள் ஆதரவை தெரிவித்தனர். நிதிஷ் பேசும்போது இனி நான் எப்போதும் மோடியுடன் தான் இருப்பேன் . ஒவ்வொரு நாளும் மோடிக்கு துணையாக இருப்பேன் , பீகாரில் நிலுவையில் உள்ள அனைத்து பணிகளும் முடிக்கப்படும். அடுத்த முறையும் எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்றார்.

அதைத்தொடர்ந்து மகாராஷ்ட்ரா முதல்வர் ஷிண்டே, அஜித் பவார்,  சிராக் பஸ்வான்,  மாஞ்சி,  பவன் கல்யாண் ஆகியோரும் வாழ்த்தி  பேசினர்.அதைத்தொடர்ந்து பாஜக தலைவர் நட்டா  நன்றி தெரிவித்தார்.  அதைத்தொடர்ந்து என்டிஏ குழு தலைவராக(  பிரதமராக) தேர்வு செய்யப்பட்ட  மோடிக்கு அனைவரும் ஆதரவு தெரிவித்து முழக்கமிட்டனர். அப்போத மோடிக்கு மாலை அணிவித்தனர்.

இறுதியாக மோடி பேசினார்.  அவர் பேசியதாவது:

என்னை தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி . இரவு பகலாக  எனது வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.  வெயிலையும்  பொருட்படுத்தாமல் உழைத்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்.  மக்கள் எனக்கு புதிய பொறுப்பு கொடுத்துள்ளனர். 22 மாநிலங்களில் என்டிஏ  வெற்றி பெற்றுள்ளது. 2019ல்  எனக்கு கிடைத்த நம்பிக்கை இப்போதும் கிடைத்துள்ளது.  புதிய எம்.பிக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.  பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கம் 10 மாநிலங்களில் 7 மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.

என்டிஏ கூட்டணி கட்சித்தலைவர்களுக்கு இடையேயான நம்பிக்கை வலிமையானது.  இது மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.  இது ஆட்சிக்காக அமைக்கப்பட்ட கூட்டணி  அல்ல இது தேர்தலுக்கு முன்னரே உருவான வெற்றிக் கூட்டணி.  நாட்டின் வளர்ச்சிக்காக எந்த சமரசமும் செய்ய மாட்டேன். நாடே முக்கியமானது.  வாஜய்பாய், ஜார்ஜ்பெர்னாண்டஸ்,  பால்தாக்கரே ஆகியோர் இந்த கூட்டணிக்கு வித்திட்டனர்.  கடந்த 30 ஆண்டுகளில் இந்த கூட்டணி தான் வலிமையானது.  அரசை நடத்த பெரும்பான்மை தேவையில்லை. ஒருமித்த கருத்து தான் தேவை.  அனைத்து முடிவுகளிலும் ஒருமித்த கருத்தை எட்டுவதே முக்கியமானது.  அனைவருக்குமான ஆட்சி நடத்துவதில் உறுதி பூண்டுள்ளோம். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சமம் தான்.  சிறந்த நிர்வாகத்துக்கு  சந்திரபாபு நாயுடுவும், நிதிஷ்குமாரும் உதாரணம்.

தமிழ்நாடு கூட்டணிக்கு  பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். தமிழ்நாட்டில் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. தமிழக கூட்டணிக்கு வாழ்த்துக்கள்  தமிழ்நாட்டில் வெற்றி கிடைக்காவிட்டாலும் வாக்கு உயர்ந்துள்ளது.  முதன்முறையாக கேரளாவில்  பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளது.  கேரளாவில் ஏராளமானோர் தியாகம் செய்துள்ளனர்.

 

10 ஆண்டுகளுக்கு பிறகும் காங்கிரஸ் 100  இடங்களை தாண்டவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி எல்லாவற்றையும் விட வலிமையானது. நாங்கள் தோற்கவில்லை. தோற்கவும் மாட்டோம்.  கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் பெற்ற இடங்களை விட நாங்கள் அதிகம் பெற்று இருக்கிறோம்.  நாங்கள் தோற்றுவிட்டதாக மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.  10 ஆண்டு ஆட்சி வெறும் டிரெய்லர் தான்.  நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக செயல்படும் என நம்புகிறோம்.  எதிர்க்கட்சி எம்.பிக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  புதிய இந்தியா,  வளர்ச்சி இந்தியா, லட்சிய இந்தியா.

நாட்டின் முன்னேற்றத்திற்காக இன்னும்  அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்.  வெற்றிபெற்றாலும், தோற்றாலும் நாங்கள் ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொள்வோம்.  ஒவ்வொரு எம்.பியும் நாட்டின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவார்கள் என நம்புகிறேன். என் புதுமை, டி வளர்ச்சி ஏ  லட்சியம். இதை உள்ளடக்கியதே  என்டிஏ.  இந்தியா கூட்டணி இப்போதும் பிளவுபட்ட வீடாகத்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து  மோடி, ராஜ்நாத்சிங்,  அமித்ஷா,  சந்திரபாபு நாயுடு,  நிதிஷ்குமார் ஆகியோர்  ஜனாதிபதி முர்முவை சந்திக்க  சென்றனர். என்டிஏ கூட்டத்தில்,  மோடி தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை கொடுத்து தங்களை ஆட்சி அமைக்க அழைக்கும்படி  கேட்டுக்கொண்டனர்.

இதில் தங்கள்  கூட்டணி தலைவராக (பிரதமர்) மோடி தேர்வு செய்யப்படுகிறார். அதைத்தொடர்ந்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் உள்ளிட்ட கூட்டணியின் மூத்த தலைவர்களுடன் பிரதமர் மோடி , ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்திக்கிறார். அப்போது, தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலை ஜனாதிபதியிடம் மோடி வழங்குகிறார். அத்துடன் புதிய அரசுஅமைப்பதற்காக உரிமையும் கோருகிறார். அதை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடியை புதிய அரசு அமைக்க ஜனாதிபதி அழைப்பு விடுப்பார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான புதிய அரசு9ம் தேதி மாலை பதவியேற்கிறது.

இந்த பதவியேற்பு விழா ஜனாதிபதி மாளிகையில்  நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் முதல் பிரதமர் நேருவுக்குப்பின்  மோடியும் தொடர்ந்து 3-வது முறையாக பிரதமராகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!