இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. 6 கட்ட தேர்தல் முடிந்து விட்டது. வரும் 1ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தல் மோடி போட்டியிடும் வாரணாசி்(உபி) தொகுதியிலும் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் 30ம்தேதி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இதில் மோடி கலந்து கொண்டு இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
மறுநாள் (மே 31) அவர் டில்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சரியாக 4.35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். 5.40 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் குமரிக்கடலில் எழுப்பப்பட்டுள்ள விவேகானந்தர் மண்டப பாறையில் அமர்ந்து தியானம் செய்கிறார். இந்த தியானம் மறுநாள் பகல் 3 மணி வரை நடைபெறுகிறது.
பாஜக வெற்றிக்காக இந்த தியானத்தை அவர் மேற்கொள்கிறார். தியானம் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து டில்லி செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடக்கிறது.
கடந்த 2019 தேர்தலின்போது தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு மோடி இமயமலையில் உள்ள கேதார்நாத் கோவிலில் மே 18ம்தேதி தியானம் மேற்கொண்டார். அந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றது. அதுபோல மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இப்போது தமிழ்நாட்டில் உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொள்கிறார்.