பிரதமர் மோடி நேற்று முன்தினம் மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு பயணம் மேற்கொண்டார். அவருக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கேரளாவின் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்தபடி சாலையில் நடந்தே சென்றார். மக்களும் பூக்களை தூவி அவருக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இதுபோன்று 20 நிமிடங்கள் நடந்து சென்ற அவர், அதன்பின் நிகழ்ச்சிக்கு உரிய நேரத்தில் செல்வதற்காக காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது, காரின் ஒரு பக்க கதவு திறந்தபடி, அதில் தொங்கியபடி சாலையோரம் நின்றிருந்த மக்களை நோக்கி கையசைத்தபடி அவர் சென்றார்.
இந்நிலையில் மோடியின் இந்த கார் பயணத்திற்கு எதிராக திருச்சூரை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் என்பவர் போலீசில் புகார் அளித்து உள்ளார். அதில், காரின் கண்ணாடி மீது பூக்கள் விழுந்து அதனை மறைத்து விட்டன. இதனால், கார் ஓட்டுநருக்கு முன்னால் உள்ளவற்றை தெளிவாக பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. ஒவ்வொருவரும் சட்டப்படி நடக்க வேண்டும் என சமூக மக்களை வற்புறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புகார் கேரள டி.ஜி.பி. மற்றும் மோட்டார் வாகன துறைக்கும் அனுப்பப்பட்டு உள்ளது.