Skip to content
Home » மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

மக்களவை சபாநாயகரை வாழ்த்தி…. மோடி, ராகுல் பேச்சு

18வது மக்களவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுள்ள ஓம் பிர்லாவை வாழ்த்தி பிரதமர் மோடி பேசியதாவது:

சபாநாயகர் பொறுப்பு கடினமானது; மீண்டும் ஓம் பிர்லா சபாநாயகராக தேர்வானதில் மகிழ்ச்சி. 17வது மக்களவையில் பல்வேறு மிக மிக முக்கியமான சட்ட முன்வடிவுகள் நிறைவேற்றப்பட்டன. ஓம் பிர்லா சபாநாயராக இருந்த போது தான் 33% மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

மூன்று புதிய குற்றவியல் நடைமுறை மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மூன்றாம் பாலினத்தவர்கள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 17வது மக்களவையில் ஓம் பிர்லாவின் பங்களிப்பு அளப்பரியது. ஓம் பிர்லா தலைமையில் ஜி20 நாடுகளின் சபாநாயகர்கள் கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அவையில் பல்வேறு புதிய முன்னெடுப்புகளை மேற்கொண்டார் ஓம் பிர்லா. கொரோனா போன்ற மிக சிக்கலான கால கட்டங்களிலும் அவையை திறம்பட நடத்தினார்.

 

தேசத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற இரு அவைகளும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். மக்களவையை எப்படி சிறப்பாக கையாள வேண்டும் என்பது ஓம் பிர்லாவுக்கு நன்றாக தெரியும். நீங்கள் வழிநடத்திய முந்தைய மக்களவையின் சாதனைகளால் நாடு பெருமை கொள்ளும். சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் நடக்காத பணிகள் உங்கள் தலைமையின் கீழ் சாத்தியமாகியுள்ளது. உங்கள் அனுபவம் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் எங்களை வழிநடத்துவீர்கள் என நம்புகிறோம்,”இவ்வாறு தெரிவித்தார்.
 எதிர்க்கட்சிகள் சார்பில்  அதாவது இந்தியா கூட்டணி சார்பில்  ராகுல் காந்தி பேசியதாவது”

 ஓம்பிர்லாவுக்கு இந்தியா கூட்டணி சார்பில் வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அரசுக்கு அரசியல் அதிகாரம் உள்ளது; ஆனால் எதிர்க்கட்சிகள் இந்திய மக்களின் குரலை பிரதிபலிக்கின்றன. இந்த முறை பெருமளவிலான மக்களின் குரலை எதிர்க்கட்சிகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

இந்த அவை சிறந்த முறையில் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். சபாநாயகர் தனது பணியை செய்வதில் எதிர்க்கட்சிகள் உதவிகரமாக இருக்கும். நம்பிக்கை அடிப்படையிலேயே ஒத்துழைப்பு என்பது நிகழ முடியும்.மக்களின் குரலை பிரதிபலிக்கும் அவையில் சபாநாயகர் என்பவர் நடுவராக செயல்பட வேண்டும். இந்த அவையில் எதிர்க்கட்சிகளின் குரல் ஒலிக்க அனுமதிக்கப்பட வேண்டியது அவசியம். இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தை எதிர்க்கட்சிகள் காப்பாற்ற வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பேச வாய்ப்பு தருவதன் மூலம் அரசியலமைப்பை காக்கும் கடமையை சபாநாயகர் செய்வார் என நம்புகிறேன்.

 

இந்த அவை எவ்வளவு திறமையாக நடத்திச் செல்லப்படுகிறது என்பது ஒரு பிரச்சனை அல்ல. இந்த அவையில் இந்திய மக்களின் குரல் ஒலிப்பதற்கு எந்த அளவு அனுமதிக்கப்படுகிறது என்பதே கேள்வி. எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதன் மூலம் இந்த அவையை திறமையாக நடத்தலாம் என்ற கருத்தே ஜனநாயக விரோதம்.அரசியல் சட்டத்தை எதிர்க்கட்சிகள் பாதுகாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில்தான் மக்கள் தேர்தலில் வாக்களித்துள்ளனர் . எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம் அரசியல் சட்டத்தை பாதுகாக்கும் கடமையை சபாநாயகர் நிறைவேற்ற வேண்டும்,”இவ்வாறு பேசினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!