Skip to content
Home » சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

சூாிய நமஸ்காரம் செய்து….. 2ம் நாள் தியானம் தொடங்கினார் பிரதமர் மோடி

மக்களவைக்கான இறுதி கட்ட தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில்,இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் கடல்நடுவே சுவாமி விவேகானந்தர் தியானம் செய்த பாறையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று  மாலை முதல்  45 மணிநேர  தியானத்தை  தொடங்கினார்.

முன்னதாக  திருவனந்தபுரத்தில் இருந்து குமரி வந்த பிரதமர் மோடி அங்குள்ள  பகவதி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன்  படம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு பூம்புகார் தனி படகு மூலம் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்றார்.அங்கு பகவதி அம்மனின் பாதம் பதித்த ஸ்ரீ பாதம் மண்டபத்தில் தரிசனம் செய்தார். மேலும் விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சர், அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவப்படங்களை வணங்கினார். விவேகானந்தரின் முழு உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்பு விவேகானந்தர் மண்டபத்தில் நின்றபடி 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார்.அதன்பிறகு தியான மண்டபத்திற்கு சென்று பிரதமர் மோடி தியானத்தை தொடங்கினார்.

இன்று அதிகாலை 5 மணிக்கு தியான மண்டபத்தை விட்டு வெளியே வந்த பிரதமர் மோடி, விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து காலை 5.55 மணிக்கு சூரிய உதய காட்சிகளை பார்வையிட்டு, சூரிய நமஸ்காரம் செய்தார். அங்கிருந்து கடல் அழகையும் ரசித்து பார்த்தார். அதன்பிறகு ஸ்ரீபாத மண்டபத்திற்கு சென்ற பிரதமர் மோடி, 10 நிமிடம் அங்கு அமர்ந்திருந்தார். காலை 7.15 மணிக்கு மீண்டும் தியான மண்டபத்திற்குள் சென்று தனது இரண்டாவது நாள் தியானத்தை தொடங்கினார். பிரதமர் மோடி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற் கொண்டதையொட்டி  நேற்று பிற்பகல் அங்கு சுற்றுலா பணிகள்  அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இன்று காலை விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.  குமரியில் இன்று கடைகளும் திறக்கப்பட்டு இருந்தது. ஆனால் விடுமுறை நாளுக்கான கூட்டம் இன்று காலை காணப்படவில்லை.

விவேகானந்தர் பாறைக்கு  செல்வோரின் போன்களை  பாதுகாப்பு படையினர் வாங்கிகொண்டனர். அவர்களின் ஆதார் அட்டைகளை பரிசோதித்து  பின்னர் தான்  பாறையை பார்வையிட  அனுப்பினர். மோடி தியானம் இருக்கும் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவி்ல்லை.  மற்ற இடங்களுக்கு சென்று வந்தனர். விவேகானந்தர் மண்டபத்தை சுற்றிலும் கமோண்டோ படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாளை (1-ம் தேதி) மாலை 4 மணி அளவில் தியானத்தை நிறைவு செய்யும் பிரதமர், படகு மூலம் கன்னியாகுமரி கரைக்கு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்று, அங்கிருந்து விமானம் மூலமாக டி ல்லி திரும்புகிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!