ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா மரணமடைந்ததை தொடர்ந்து அங்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் அந்த மாவட்ட செயலாளர் ஆனந்த் போட்டியிடுகிறார். மற்ற கட்சிகள் வேட்பாளர் தேர்வு பணியில் உள்ளன.
இந்த நிலையில் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கிருஷ்ணனுண்ணி தேர்தலுக்கான முன் ஏற்பாடு பணிகளில் தீவிரமாக உள்ளார். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு பொதுவான பெயர், பொதுவான சின்னங்களை கொண்டு நடத்தப்பட்டது. மாதிரி வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் கிருஷ்ணனுண்ணி கூறுகையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சரியான நிலையில் இருக்கிறது என்பதை அனைத்து கட்சியினரும் அறியும் வகையில் இந்த பணி நடந்தது என்றார்.