2024 பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக கோயம்புத்தூர், தென் சென்னை, மதுரை ஆகிய பாராளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். மக்கள் நலன்களுக்கான நமது செயல்பாடுகளையும், செயல்திட்டங்களையும் மக்கள் மத்தியில் நேரடியாகக் கொண்டு சேர்க்கும் இந்த மதிப்புமிக்க பங்களிப்பினைச் செய்ய ஆர்வமும் அர்ப்பணிப்பும் மிக்க களவீரர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
களவீரராகப் பணியாற்ற விரும்புகிறவர்கள் தங்களது விருப்பதை மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஆ. அருணாச்சலத்திடம் வரும் 12ம் தேதிக்குள் தங்களது விருப்பத்தைத் தெரியப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தலைவரின் வழிகாட்டுதலின் படி தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களின் பட்டியல், ஜூலை 21-ம் தேதி அன்று அறிவிக்கப்படும்.
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப இந்தியப் பிரதமர் அங்கு நேரில் சென்று சுமுகமான தீர்வை ஏற்படுத்த முயற்சிக்கவேண்டும்
என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படுகிறது. அதன்படி, 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு மாவட்டச் செயலாளர் வீதம் நியமிக்கப்படுகிறார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பணிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, தொழில்முனைவர் அணி மறுசீரமைப்பு செய்யப்படுகிறது.
இந்த அணியை வழிநடத்த ஒருங்கிணைப்பாளர் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் ஏஎஸ்ஆர். ஜான்சன், மயில்வாகனன் தணிகைவேலு, ஸ்ரீ ராதஷா தேவியர் ஆகியோர் இடம்பெறுகிறார்கள். இவர்கள் மாநில செயற்குழு உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
மக்கள் நீதி மய்யம் கட்சியில் மீனவர் அணி உருவாக்கப்படுகிறது. இதன் மாநிலச் செயலாளராக இரா. பிரதீப் குமார் நியமிக்கப்படுகிறார்.
தனியார் நிறுவன பஸ் ஓட்டுனராக இருந்த கோயம்புத்தூர் செல்வி. ஷர்மிளா, ஒரு தொழில்முனைவராகத் தனது பயணத்தைத் தொடரும்பொருட்டு ஒரு புதிய கார் வழங்கிய தலைவர், . கமல்ஹாசன் அவர்களுக்கும், ‘கமல் பண்பாட்டு மையம்’ அமைப்பிற்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது.
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் ‘ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம்’ நடத்திய தேசிய நெல் திருவிழா 2023 நிகழ்வு பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த நமது தலைவர் கமல்ஹாசன் அவர்கள் எடுத்த முயற்சிகள் போற்றுதலுக்குரியவை.
இந்த அமைப்புடன், நமது தலைவர் அவர்களின் ‘கமல் பண்பாட்டு மையம்’ இணைந்து ‘பாரம்பரிய நெல் ரகங்களுக்கான விவசாய ஆராய்ச்சி மையம்’ ஒன்றினை விரைவில் தொடங்க இருப்பது மகிழ்ச்சியான செய்தி. மண், மொழி, மக்கள் காக்க சகலவழிகளிலும் தன் பங்களிப்பினைச் செய்து வரும் தலைவர் அவர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு பாராட்டுகிறது.
ஆளுநர் . ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக தனது அதிகார வரம்புகளை மீறி செயல்படுவது ஏற்புடையதல்ல. மாநில அரசின் வளர்ச்சிப்பணிகளை, நலத்திட்டங்களை, கொள்கை முடிவுகளை தாமதிப்பதால், நிராகரிப்பதால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான். தனது பொறுப்பையும், தான் வகித்து வரும் பதவியின் கண்ணியத்தையும் உணர்ந்து ஜனநாயக மாண்புகளைக் காக்கும் வகையில் ஆளுநர் கடமையாற்ற வேண்டுமென மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு வலியுறுத்துகிறது.
மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மக்களவை தேர்தலையொட்டி கோவை, மதுரை, தென்சென்னை ஆகிய 3 தொகுதிகளில் வார்டு வாரியாக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவதாக முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், மேற்கண்ட 3 தொகுதிகளிலும் மநீம போட்டியிட இருப்பதாக தெரிகிறது.