தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் காமராஜர் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு, பேராவூரணி மட்டுமின்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த நோயாளிகள் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு புற நோயாளிகள் பிரிவில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் உள்ளனரா என ஆய்வு செய்தார்.
தொடர்ந்து ஆண்கள் வார்டு, பெண்கள் வார்டு ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். அப்போது அங்கு இருந்த நோயாளிகளிடம் முறையாக மருத்துவ
சிகிச்சை வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகள் குறித்து மருத்துவர் பாலா மற்றும் செவிலியர்களிடம் கேட்டறிந்தார். கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தியதோடு, காலிப்பணியிடங்கள் குறித்து கேட்டறிந்து, சுகாதாரத்துறை அமைச்சர், முதலமைசர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தொடர்ந்து ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும், அரசு மருத்துவமனை புதிய கட்டட கட்டுமானப் பணிகள் குறித்து ஆய்வு செய்த அவர், ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். மருத்துவமனை பயன்பாட்டிற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணியை சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தொடங்கி வைத்தார். ஆய்வின் போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் உடனிருந்தனர்.