வங்க கடலில் உருவான ரிமால் புயல் கடந்த 26ம் தேதி வங்கதேசத்துக்கும், மேற்கு வங்கத்துக்கும் இடையே கரையை கடந்தது. அதன் பின் அந்த புயல் வட கிழக்கு மாநிலங்கள் வழியாக கடந்து போனது. இதனால் அந்த மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மழை கொட்டுகிறது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் தலைநகர் அய்சால் மாவட்டத்தில் பெய்த அதி கனமழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.
இந்நிலையில் அங்குள்ள கல்குவாரி இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக அப்பகுதியில் நிலச்சரிவு ஏற்படுவதால் தேடுதல் பணி பாதிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாநிலத்தின் பிற நகரங்களிலிருந்து அம்மாவட்டம் முற்றிலுமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.