பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் 70வது தேசிய திரைப்பட விழாவில் இந்த விருது வழங்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட்டில் டிஸ்கோ டான்சர் படம் மூலம் புகழ் பெற்ற இவர், வங்காளம், தெலுங்கு, கன்னடம், தமிழ் உட்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த 2015-ம் ஆண்டு ஆதி நடிப்பில் வெளியான ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
கொல்கத்தாவைச் சேர்ந்த 74 வயதான மிதுன் சக்கரவர்த்தி மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
இந்திய திரையுலகினருக்கு மத்தியஅரசினால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருது. லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியான் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இந்த விருதினை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இதையொட்டி மிதுனுக்கு பிரதமர் மோடி உள்ளிட்டோார் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.