Skip to content

சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்…. இந்தியாவில் அதிகரிப்பு…. அமெரிக்கா அறிக்கை

023-ம் ஆண்டுக்கான சர்வதேச மத சுதந்திரம் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டங்கள், வெறுக்கத்தக்க பேச்சு, சிறுபான்மை மத சமூகங்களைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் நிகழ்வுகள்அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், உலகெங்கிலும் உள்ள மக்கள், மத சுதந்திரத்தை பாதுகாக்க தீவிரம் காட்டுகின்றனர்.

இந்தியாவில் 10 மாநிலங்களில் மதமாற்றங்களை கட்டுப்படுத்துவற்கான தடைச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சில மாநிலங்களில், திருமண நோக்கத்திற்காக கட்டாயமத மாற்றங்களுக்கு எதிராக அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.மத சிறுபான்மை குழுக்களின் சில உறுப்பினர்கள், வன்முறையில் இருந்து அவர்களை பாதுகாப்பதற்கும், மத சிறுபான்மை குழுக்களின் உறுப்பினர்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்கும், அவர்களின் மதம் அல்லது நம்பிக்கை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மத சமூகங்களுக்கு தனித்தனி தனிநபர் சட்டங்கள் அமைப்பதற்குப் பதிலாக, நாடு முழுவதும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை (யு.சி.சி.) அமல்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி வருகிறார். இந்த முயற்சியை முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர், மற்றும் பழங்குடியின தலைவர்கள் மற்றும் சில மாநில அரசுகள் எதிர்த்தனர். இது நாட்டை இந்து தேசமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் பேசுகையில், இந்தியாவில், மதமாற்ற தடுப்புச் சட்டங்கள், வெறுப்பு பேச்சு மற்றும் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருவதாக கூறினார். இதேபோல் மனித உரிமைகள் தொடர்பான  அறிக்கையிலும் இந்தியாவுக்கு எதிரான கருத்தை அமெரிக்கா கூறியிருந்தது.

அந்த அறிக்கையை இந்தியா உடனடியாக நிராகரித்தது. தவறான தகவல் மற்றும் தவறான புரிதலின் அடிப்படையில் அந்த அறிக்கை உள்ளதாக விமர்சனம் செய்தது. சில அமெரிக்க அதிகாரிகளின் அழுத்தம் மற்றும் பாரபட்சமான கருத்து, இந்த அறிக்கையின் நம்பகத்தன்மையை குறைக்கும் என்றும் கூறியது. அமெரிக்காவுடனான நட்புறவை மதிக்கும் அதேசமயம் கவலையளிக்கும் விஷயங்களில் வெளிப்படையான பரிமாற்றங்களைத் தொடர உள்ளதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!