மக்களவை தேர்தலில் எந்த தொகுதியில் வாக்குகள் குறைந்தாலும், அந்த தொகுதிக்கான அமைச்சர்கள், மாவட்ட செயலாளர், எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை உறுதி என முதல்வர் மு.க. ஸ்டாலின் தேர்தலுக்கு முன்பே அறிவித்து இருந்தார். அதன்படி அவர் பல அமைச்சர்களை நீக்கவும் திட்டம் வகுத்திருப்பதாக தெரி்கிறது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களாக முதல்வர் ஸ்டாலி்ன் முக்கியமான அதிகாரிகள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்தாராம். இதில் அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற திட்டம் வகுக்கப்பட்டதாம்.
மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தாலும், அல்லது பாஜகவுக்கு முன்பைப்போல மெஜாரிட்டி கிடைக்காவிட்டாலும், தமிழக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்ய வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறாராம். அதன்படி 4 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதில் 2 அமைச்சர்கள் சீனியர்கள் என்றும், 2 அமைச்சர்கள் புதியவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தவிர சீனியர்கள் சிலரின் செயல்பாடுகள் முற்றிலும் முதல்வருக்கு பிடிக்கவில்லையாம். எனவே அந்த சீனியர்களை அப்படியே அதே இடத்தில் வைத்துக்கொண்டு இலாக்காக்களை மட்டும் பிடுங்கி, டம்மி இலாக்காக்களை கொடுக்கவும் திட்டம் வகுத்துள்ளாராம். இந்த நடவடிக்கை எடுத்தால் தான் 2026ல் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற முடியும். இவர்களை இப்படியே வைத்துக்கொண்டிருந்தால், திமுகவுக்கு கெட்டப்பெயர் ஏற்படுத்தி விடுவார்கள்.
அமைச்சர்கள் என்ற பதவியை வைத்துக்கொண்டு இவர்கள் தங்களைத்தான் வளர்க்கிறார்கள். கட்சியையும் வளர்க்கவில்லை. அரசுக்கும் இவர்களால் எந்த பயனும் இல்லை. நாற்காலியை நிரப்பிக்கொண்டு இருக்கிறார்கள் என்று முதல்வர் வருத்தத்தோடு கூறினாராம்.
அத்துடன் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்கவும் திட்டம் தயாராகி விட்டதாம். இவை அனைத்தும் ஜூன் 2வது வாரத்தில் நடக்கும் என கோட்டை வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்று தகவல்கள் வந்துகொண்டு இருப்பதால் எப்படியும் இந்த முறையும் பதவியை பிடித்து விடவேண்டும் என்று திமுக முன்னணி தலைவர்கள் பலர் இப்போதே முதல்வரிடம் நச்சரிக்கத் தொடங்கி விட்டார்களாம். இது போல திமுக கூட்டணியில் உள்ள மேலும் சில கட்சிகளும் மத்திய அமைச்சர் பதவி பெற்றுவிடவேண்டும் என்ற திட்டம் வகுத்து இப்போதே காய் நகர்த்துகிறார்களாம்.