காங்கிரசும் உட்கட்சி சண்டையும் போல என எதிர்க்கட்சியினர் கேலி பேசுவார்கள். இது கர்நாடக காங்கிரஸ் விவகாரத்திலும் உண்மை என நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் பதவிக்காக 5 நாட்கள் இழுத்துக்கொண்டிருந்த நிலையில், நேற்று நள்ளிரவு சோனியா காந்தி தலையிட்டு இதில் சமரச தீர்வை கண்டார்.
75 வயதான சித்தராமையா தான் மீண்டும் முதல்வராக வேண்டும் என ராகுல் விரும்பினார். இதனால் சித்தராமையா இந்த ஆதரவை கெட்டியாக பிடித்துக்கொண்டு சாதித்து விட்டார். அதே நேரத்தில் 5 ஆண்டுகளாக கட்சியை கட்டிக்காத்து இன்று அரியணை ஏற்றியதில் மாநில தலைவர் டிகே சிவக்குமாரின் பங்கு மகத்தானது.
அவர் மீது வழக்குகள் உள்ளது என எதிர்தரப்பினர் கூறினாலும், அது காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் பாஜகவால் கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தம் தான் வழக்குகள். எனவே இந்த முறை தனக்கு முதல்வர் பதவி தரவேண்டும்என டிகே சிவக்குமார் வாதிட்டபோதும் அது எடுபடவில்லை. அதே நேரத்தில் டிகே சிவக்குமாரை எளிதில் விட சோனியா விரும்பவில்லை.
எனவே அவருக்கு எதிர்காலத்தில் உரிய மரியாதை அளிக்கப்படும் என சோனியா உறுதி அளித்ததாகவும் தெரிகிறது. எனவே சிவக்குமார் துணை முதல்வர் பதவிக்கு ஒத்துக்கொண்டார். முதல்வர், துணை முதல்வர் தேர்வு குறித்து காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக ,அறிவித்துள்ளது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த டிகே சிவக்குமார் புன்னகையுடன் வந்தார். அவருக்கு சில முக்கிய இலாகாக்கள் வழங்கப்படும் என சோனியா உறுதி அளித்துள்ளாராம்.
5 நாள் பிரச்னை தீர்ந்தது என்ற நிம்மதி அடைந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு, தலைவலி போய் திருகுவலி வந்ததாம் என்ற நிலை தான். இப்போது 7க்கும் மேற்பட்டவர்கள் டில்லியில் முகாமிட்டு தங்களுக்கு மந்திரி பதவி வேண்டும் என அடம் பிடிக்கிறார்கள். அவர்களையும் சமாதானப்படுத்தி பெங்களூரு அனுப்பும் பணியில் மேலிட தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர்.