Skip to content

அமைச்சர்களுக்கு அதிரடி வைத்தியம் கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… இலாகாக்கள் மாற்றம்

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை  காலை பதவியேற்க உள்ள நிலையில் மேலும் பல அமைச்சர்கள் இலாகாக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.

2021-ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றபோது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 34 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், சிவசங்கர் ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற போது 10 அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டது. அமைச்சரவை எண்ணிக்கையும் 34-ல் இருந்து 35ஆக உயர்ந்தது.

234 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட சட்டசபையில் இதற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியாது என்பதால் யாரையாவது நீக்கினால்தான் புதிய மந்திரியை நியமிக்க முடியும் என்ற நிலை இருந்தது. இந்த நிலையில்தான் ஆவடி நாசர் நீக்கப்பட்டு டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். டி.ஆர்.பி.ராஜா தி.மு.க.வில் தகவல் தொழில்நுட்ப பிரிவுச்செயலாளராக இருப்பதால் தகவல் தொழில்நுட்பத்துறை இலாகா அல்லது பால்வளத்துறை இலாகா ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக தமிழக அமைச்சரவையில் உள்ள பெரும்பாலான அமைச்சர்களின் செயல்பாடுகள் முதல்வருக்கு பிடிக்கவில்லை என்ற கருத்து பரவலாக பேசப்படுகிறது. அமைச்சர்களின் பேச்சு,  பொதுமக்களின் மத்தியில் அமைச்சர்களின் நடவடிக்கைகள் ஆகியவை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இது குறித்து திமுக  பொதுக்குழுவில் பேசிய  முதல்வர் மனவருத்தத்துடன் சில கருத்துக்களை வெளியிட்டார்.

ஆனாலும் அமைச்சர்களின் நடவடிக்கைகள் எந்தவிதத்திலும் மாற்றமில்லாமல் அதே நிலையில் தான் நீடிக்கிறது. மூத்த அமைச்சர்கள் மட்டுமல்ல, சில ஜூனியர் அமைச்சர்கள் கூட சரியான நேரத்திற்கு  நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை, துறை பற்றிய சரியான புரிதல் இல்லை , அதை புரிந்து கொள்ள வேண்டும்  என்ற  எண்ணம் கூட இல்லாமல் அமைச்சர்கள் செயல்படுகிறார்கள் என்ற  புகார் மக்கள் மத்தியில் நிலவுகிறது. அமைச்சர்கள் ஒவ்வொருவரைப்பற்றிய தகவல்களும் உளவுத்துறை மூலம் முதல்வருக்கு கிடைத்து வருகிறது.

அந்த தகவல்கள் எல்லாம் முதல்வருக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இல்லையாம். எனவே தான் இந்த முறை பல அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முதல்வர் முடிவு செய்துள்ளார்.  அது பற்றிய விவரம் இன்று இரவு அல்லது நாளை அதிகாரப்பூவமாக அறிவிக்கப்படலாம்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இலாகா மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பால்வளத்துறை அல்லது சுற்றுலாத்துறை  கிடைக்கும் என தெரிகிறது.  சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள கா.ராமச்சந்திரன் இலாகா மாற்றம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு வருவாய்த்துறை கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அப்படி மாற்றப்பட்டால் அவரிடம் உள்ள ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனுக்கு வழங்க வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.

நிதி அமைச்சர்   பழனிவேல் தியாகராஜன் மாற்றப்பட்டு, புதிய நிதி அமைச்சராக  தங்கம் தென்னரசு நியமிக்கப்படலாம் என  ஆரம்பத்தில் பேசப்பட்டது. ஆனால்இப்போது நிதி அமைச்சர் மாற்றம் இல்லை என  கூறப்படுகிறது.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இலாகாவும் மாற்றம் செய்யப்படும் என பேசப்படுகிறது.  மேலும் பல மூத்த அமைச்சர்கள் இலாகாவும் மாற்றப்படலாம் என சென்னை கோட்டை வட்டாரத்தில் பரபரப்புடன் பேசப்படுகிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!