மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சமூக செயற்பாட்டாளர் நடிகை கஸ்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், சென்னையில் 2015ல் வெள்ளம் ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை குறை கூறினார்கள். தற்போது ரூ.4 ஆயிரம் கோடியில் மழைநீர் வடிகால் அமைத்தும் வெள்ள பாதிப்புகள் அதிகம்.
மழைநீர் வடிவதற்கு 3 நாட்களுக்கு மேலாகியது. கடந்த 2015 பாதிப்பின் போது தன்னார்வலர்கள் அதிக அளவில் உதவி செய்தனர். ஆனால் தற்போது அதிக அளவில் தன்னார்வலர்கள் உதவி செய்யவில்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி, நடிகர் விஜய் ஆகியோர் எதுவும் பேசவில்லை.
சூர்யா,கார்த்தி உள்ளிட்ட சில நடிகர்கள் நிதி வழங்கினர். நடிகர்கள் உதவி செய்யவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள். நடிர்கள் பொது சேவை செய்வது அவர்களது விருப்பம். மக்களின் ஓட்டுக்களை பெற்று பதவிக்கு வந்தவர்கள் அமைச்சர்கள் தங்கள் சொந்த பணத்தை எத்தனை பேர் கொடுத்தார்கள்.
எம்.பி. கனிமொழி தனது வீட்டில் சமைத்து உணவு வழங்கியதோடு நிவாரண பொருட்கள் வழங்கினார்.
அதுபோல் சொந்த பணத்தில் எத்தனை அமைச்சர்கள் செய்தார்கள். அவர்களிடம் இல்லாத பணமா? அரசு நிவாரணம் மத்திய அரசு கொடுக்கவில்லை அவர்கள் கொடுத்தால் நாங்கள் கொடுப்போம் என்று சொல்லக்கூடாது. பதவியில் இருப்பவர்கள் யார் கொடுத்தார்கள்? இதுவரை பதவிக்கே வராத ஒரு கட்சி செய்த உதவிகளை கூட யாரும் செய்யவில்லை. ஒரு அமைச்சர் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளார் என்று செய்தி வெளியிடுகிறார்கள். அந்த அமைச்சர் வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாத நிலையில் இருந்ததாக அவரே தெரிவிக்கிறார். அந்த அளவில் நாட்டு நடப்பு இருக்கிறது. வெள்ளத்தில் என் வீட்டில் தண்ணீர் வந்தது. அந்த போட்டோவை வெளியிட்டதற்கு அச்சுறுத்தல் அதிகமாக வந்தது.
கடந்த 2015ம் ஆண்டு வெள்ளத்தின் போது ஆளாலுக்கு கருத்து சொன்னவர்களுக்கு அச்சுறுத்தலோ, பொய் விளம்பரமோ வரவில்லை. ஸ்ரீவைகுண்டத்தில் 1500 ரயில் பயணிகள் சிக்கியிருந்தனர். 150 பேரை மட்டும் அரசு வாகனத்தில் அழைத்து சென்றனர். மீதி பேர் 2 நாட்கள் சிரமப்பட்டனர். மத்திய, மாநில அரசு கால தாமதமாகத்தான் உதவினர். அதிகாரிகள் யாரும் உதவிசெய்யவில்லை என்று மக்கள் கூறினர். மத்திய, மாநில அரசுகள் மாற்றி மாற்றி குறைகூறுகின்றனர். ஆனால் மக்கள் தெருகோடியில்தான் இருக்கின்றனர்.
அரசு டாஸ்மாக் விற்பனைக்கு டார்க்கெட் வைக்கிறது. நீட் தேர்வு வெற்றி, அரசு பள்ளிகளில் முதலிடம் ஆகியவற்றுக்கு டார்கெட் இல்லை. மின்சார கட்டணம் உயர்த்தியுள்ளனர். வெள்ளம் வந்த காலத்தில் மின்தடை ஏற்பட்டது. ஆனால் மின் கட்டணம் மட்டும் குறையவில்லை. மின்சாரத்துறை, அறநிலையத்துறைக்கு டார்கெட் வைக்கிறார்கள்.
படிப்பதற்கு டார்கெட் வைக்கசொன்னால் குடிப்பதற்கு அரசு டார்கெட் வைப்பது வேதனை அளிக்கிறது. மதுவால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அரசே மதுவிற்கு இலக்கு நிர்ணயித்து டார்கெட் வைக்கிறது. அதற்கான அமைச்சர் குடிப்பவர்களை குறை சொல்லக்கூடாது.
அரசியலுக்கு வருவதாக கூறி ரஜினி ஏமாற்றிவிட்டார். உடல்நிலை சரியில்லை என்று கூறுகிறார். அவரைவிட உடல்நலம் குன்றியவர்கள் அரசியலில் இருக்கிறார்கள். மழைவெள்ள பாதிப்பிற்கு கூட ரஜினி குரல் கொடுக்கவில்லை. அவரது படம் ரிலீசானால்தான் குரல் கொடுப்பார்.
மக்கள் பிரச்னையை பேசாமல் மத்திய, மாநில அமைச்சர்கள் தரம்தாழ்ந்து பேசுவது வேதனை அளிக்கிறது. மக்களுக்கு சேவை செய்வதை விட்டுவிட்டு சண்டைபோடுவதைதான் வேலையாக வைத்துகொண்டுள்ளனர். அதைதான் செய்தியாக வெளியிடுகிறார்கள். மத்திய நிதிஅமைச்சர் புள்ளி விபரத்தோடு சொல்லிவிட்டார்கள். மாநில அரசும் முறையான நிவாரண நிதிகேட்க வேண்டும். கொடுக்க முடியாத நிதியை கேட்டுவிட்டு மத்திய அரசு கொடுக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
மழைவெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு தன்னார்வலர்கள் உதவி செய்வதற்கு கட்சிபார்த்து செய்ய சொன்னதாகவும், பலர் வெளியில் தெரியாமல் செய்ததாக இரண்டு விதமாக கூறப்படுகிறது. சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டதால் தன்னார்வலர்கள் குறைந்த அளவில் உதவி செய்துள்ளார்களா என்று தெரியவில்லை என்றார்.