கடந்த ஆண்டு மார்ச் மாதம் திருச்சி கண்டோன்மெண்ட் போலீஸ் ஸ்டேஷனில் திமுக எம்.பி. ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர்களான காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ், துரைராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் 4 பேர் மீது திமுக மேலிடம் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் திருச்சி நாடாளுமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற்றது. இதில் திருச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கந்தவர்கோட்டை, திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு மற்றும் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்த காஜாமலை விஜய் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதியைச் சேர்ந்த துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக புகைப்படங்கள் வெளியானது. இந்த நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்கள் எப்படி உதயநிதி கூட்டத்தில் கலந்து கொள்ள முடியும்? அறிவாலய ஊழியர்களை ஏமாற்றி உள்ளே சென்றார்களா? என செய்திகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் நேரு தரப்பில் கேட்டதற்கு .. கடந்த மார்ச் மாதம் நடந்த சிவா வீட்டின் மீதான தாக்குதல் மற்றும் போலீஸ் ஸ்டேஷன் விவகாரம் ஆகியவை குறித்து இருதரப்பும் சமாதானம் ஆகிவிட்டோம். வழக்கு உள்ளிட்ட அனைத்துக்கும் இரு தரப்பும் எழுதி கொடுத்தாகி விட்டோம். அதன் தொடர்ச்சியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 4 நிர்வாகிகளும் தொடர்ந்து கட்சி கூட்டங்களில் கலந்து கொண்டு தான் வருகிறார்கள். இது தலைமைக்கு தெரியும். எனவே இதில் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை, இந்த விஷயத்தை சிவா மற்றும் அமைச்சர் மகேஸ் தரப்பினர் வேண்டுமென்றே சர்ச்சையாக்கி வருகின்றனர் என விளக்கம் அளிக்கின்றனர்.