கோவை மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நேற்று கோவை கொடிசியா சாலையில் நடந்தது. விழாவுக்கு மாவட்ட பொறுப்பு அமைச்சரும், மின்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார். விழாவில் கலந்து கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2ஆயிரம் பேருக்கு தலா 10 ஆயிரம் வீதம் வழங்கி வாழ்த்தி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
வேலையின்னு வந்துட்டா, வெள்ளைக்காரன்னு சென்னையில் ஒரு பழமொழி சொல்வார்கள். நான் அதை– வேலையின்னு வந்துட்டா செந்தில்பாலாஜின்னு தான் சொல்வேன். அந்த பழமொழிக்கே உதாரணம் செந்தில் பாலாஜி தான். மற்ற அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் பொறாமைப்படும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் இருக்கிறது. இதை அவருக்கு முன் பெருமைக்காக நான் சொல்லவில்லை.
செந்தில்பாலாஜியிடம் ஒரு வேலையை கொடுத்திட்டா, அவர் அதை செய்யாம தூங்மாட்டார். மற்றவர்களையும் தூங்க விடமாட்டார். அவரிடம் ஒரு பொறுப்பை கொடுத்து விட்டால் அதில் 100சதவீதம் வெற்றியை கொடுப்பார்.
திமுக இளைஞரணி பொறுப்பு என்னிடம் 2019ல் கொடுக்கப்பட்டது. அது முதல் நான் செல்லும் இடங்களில் கட்சிக்காக நிதி திரட்டி வருகிறேன். ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டுமானால் ரூ.1000 நன்கொடை, மதியம் உணவு சாப்பிட சென்றால் ரூ.500 என நிதி திரட்டி இப்போது ரூ.4 கோடி சேர்த்து உள்ளோம்.
இதன் மூலம் கடந்த 1 மாதமாக திமுக முன்னோடிகளுக்கு இளைஞரணி சார்பிலும் பொற்கிழி வழங்கி வருகிறோம். சேலத்தில் 21 பேருக்கும், நாமக்கல்லில் 21 பேருக்கும், கரூரில் 12 பேருக்கும் இளைஞரணி சார்பில் பொறிகிழி வழங்கி உள்ளோம். இதுவரை ரூ.17.5 லட்சம் வழங்கி உள்ளோம். இனி நிதி உதவி மேலும் அதிகாரிக்கப்படும்.
நான் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்காதீர், பிளக்ஸ் வைக்க கூடாது. பூங்கொத்து, பொன்னாடை வேண்டாம். அதற்கு பதில் ரூ.50 நிதி நன்கொடையாக கொடுத்தால் போதும்.
நம்முடைய முதல்வர் பொறுப்பேற்றதும் சொன்னார், வாக்களிக்காத மக்களும், திமுகவுக்கு ஏன் வாக்களிக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு நாங்கள் செயல்படுவோம் என்றார். அதன்படி கோவை மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. ஆனாலும் முதல்வர் கோவை மாவட்டத்திற்கு 6 முறை வந்து உள்ளார். 1 லட்சம் பேருக்கு மேல் நலத்திட்ட உதவிகள் வழங்கி உள்ளார்.
அதன் பிறகு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 33 பேரூராட்சிகளில் 31 ல் வெற்றி பெற்றோம். 7 நகராட்சிகளில் 7ஐயும் வென்றோம். இதற்கு காரணம் திமுக முன்னோடிகள் தான். நீங்கள் தான் இந்த இயக்கத்தின் வேர். ரத்த ஓட்டம். திமுக ஆட்சி அமைந்ததற்கு காரணம் நீங்கள். உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
அதிமுக ரூ.5 லட்சம் கோடி கடனை வைத்து விட்டு சென்றது. அந்த நேரத்தில் கொரோனா தொற்றும் தாக்கியது. அந்த நிலையிலும் திமுக ஆட்சிக்கு வந்ததும் குடும்பத்துக்கு ரூ.4 ஆயிரம் கொரோனா நிவாரண நிதி வழங்கினோம். இன்று 2 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கி வருகிறோம்.
2019ல் மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் வென்றோம். 2024ல் நடக்க இருக்கும் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளையும் வென்றெடுப்போம். அதற்கான தேர்தல் பணிகளை இப்போதெ தொடங்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அமைச்சர் உதயநிதிக்கு, அமைச்சர் செந்தில்பாலாஜி வெள்ளி செங்கோல் கொடுத்து மாலை அணிவித்தார்.