விமர்சனங்களைச் செயலால் எதிர்கொள்வேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து.. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.நூற்றாண்டு கண்ட திராவிடக் கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தைத் தாங்கி நிற்கும் விழுதாக, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம் தமிழ்நிலத்தில் வேரோடி மக்கள் வாழ்க்கையை முன்னேற்றி வருகிறது.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் எனக் கழக முன்னோடிகள் வரிசையில், களம்பல கண்ட போராளியான கழகத் தலைவர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சிரிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று இணைகிறேன். 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜூலை 4-ஆம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராகத் தலைவர் என்னை நியமித்தார்கள். தலைவர் உருவாக்கிய அணி, தாய்க் கழகத்தின் முன்னணிப் படையணியாக இளைஞர் அணியைத் தலைவர் உருவாக்கி வைத்திருந்தார். அதற்கு, என்னை நியமித்தபோதும், இன்று நான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை, அழுத்தத்தை அன்றும் உணர்ந்திருந்தேன். ‘நம்மை நம்பி தலைவர் அவர்கள் வழங்கிய பொறுப்பு. அதற்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும்’ என்பதை உணர்ந்து இளைஞர் அணி சகோதரர்களுடன் இணைந்து உழைக்கத் தொடங்கினோம். கழகம் ஆட்சியில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு பல்வேறு மக்கள் பணிகளைச் செய்யத் தொடங்கினோம். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளைத் தூர்வாரினோம். நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் கழக இளைஞர் அணியினால் தூர்வாரப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.