Skip to content

கவர்னர் வேலையை தவிர மற்ற வேலைகளை எல்லாம் பார்க்கிறார் ரவி…. அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

ஆளுநர் ஆர்.என். ரவி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருக்கிறார். அதில் அவர் தி.முக. தெரிவித்துள்ள பல்வேறு கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துள்ளார். பேட்டியில், திராவிட மாடல் என்ற கொள்கை எல்லாம் எப்போதோ காலாவதியாகி விட்டது. அதற்கு மீண்டும் உயிர்கொடுக்க நினைக்கிறார்கள். அது ஒரே பாரதம் ஒரே இந்தியா கொள்கைக்கு பொருந்தாத ஒன்று  என அவர் தெரிவித்துள்ளார். மேலும், திராவிட மாடல் கொள்கை நாட்டின் சுதந்திர போராட்டத்தை குறைத்து மதிப்பிடுகிறது. தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அத்தகைய தியாகிகளின் நினைவு மற்றும் வரலாற்றை அழிக்கும் வகையில் பேசப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆளுநர் ஆர்.என். ரவி பேட்டிக்கு தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார். அதில், “கமலாலயத்தில் உட்கார்ந்திருக்க வேண்டியவர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டு அரசியல் செய்து கொண்டு வருகிறார். ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியை பார்க்கும் போது அவர் ஆளுநர் பதவிக்காக தமிழ்நாட்டுக்கு வரவில்லை, பாஜக தலைவர் பதவிக்காக வந்திருப்பது போல் தெரிகிறது. ஆளுநர் ரவி ஒப்புக்கொண்டாலும், இல்லாவிட்டாலும், தமிழ்நாடு அமைதி பூங்கா தான். ஆளுநர் உரைகள் அமைதியை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது என்பது தான் உண்மை.” ஆளுநர் ஆர்.என். ரவி சனாதன வகுப்பு எடுக்கிறார். ஆரியத்துக்கு ஆலாபனை பாடுகிறார். ஆளுநர் பணியை தவிர அனைத்து பணிகளையும் அவர் செய்து கொண்டிருக்கிறார் ஆர்.என்.ரவி. மதச்சார்பற்ற நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பதை மறந்துவிட்டு  அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்தை மீறி நிர்வாக விவரங்களை பொதுவெளியில் பேசி வருகிறார் .” “மாநில அரசு எழுதி அனுப்பியதை வாசிக்க விருப்பம் இல்லை என்றால், வேறு வேலையை பார்க்க வேண்டுமே தவிர, அவை மாண்பை குறைக்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஆளுநர் பதவி என்பது மாநில அரசின் பிரதிபலிப்பே தவிர, தனிப்பட்ட அதிகாரம் கொண்ட பதவியல்ல. ஆளுநர் பதவியில் இருப்பவர்கள் அதற்கான தன்மையுடன் நடக்க வேண்டுமே தவிர, தனி ஆவர்த்தனம் செய்யக்கூடாது.” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!