அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, உடல் நலம் பாதிக்கப்பட்டார். பின்னர் அவரை சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவரது இதயத்தில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டதால் காவேரி ஆஸ்பத்திரியில் ஆபரேசன் செய்யப்பட்டது. ஜாமீன் மறுக்கப்படுவதால் கடந்த 6 மாதமாக அமைச்சர் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டான்லி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று ஆஞ்சியோ சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை அவருக்கு உணவு சாப்பிடுவதற்கு முன்னதாக ரத்த பரிசோதனை நடந்தது. அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வாறு உள்ளது என்பதை அறிய இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் காலை உணவு முடித்த ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னரும் ரத்த பரிசோதனை நடைபெற்றது. அத்துடன் ரத்த அழுத்தமும் அதிகரித்து உள்ளது. அதை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும் டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அத்துடன் வயிறு, குடல் பகுதியில் வலி இருந்ததால், அதற்க காரணத்தை கண்டறிய எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதில் அமைச்சருக்கு பித்தப்பையில் கல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே முதல் கட்டமாக வலியை குறைக்க மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.
பித்தப்பை கல் என்பது, சிறுநீரக கல் போல கரைக்க முடியாது என்பதால், வலி அதிகரிக்கும் பட்சத்தில் பித்தப்பையை ஆபரேசன் மூலம் அகற்றுவது தான் தீர்வு என்பதால் , டாக்டர்கள் என்ன மாதிரியான சிகிச்சை அளிப்பார்கள் என்பது தெரியவில்லை. தொடர்ந்து அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள். நரம்பியல் தொடர்பான பரிசோதனைகளும் செய்யப்பட்டு , அதற்கான சிகிச்சைகளும் அளிக்கப்பட உள்ளது.