செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது’’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அப்போது திமுக அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கைது செய்யப்பட்டு சிறை சென்றதால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றங்கள் நிராகரித்தன. இதற்கு நடுவே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் ஆளுநர் ரவி. இருப்பினும் இன்று வரை செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகளில் தங்களால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், அவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வழக்குகளை முடித்து வைத்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.