தமிழ்நாடு மின்சாரம் வாரியம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கை … தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் நல்லாட்சியில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில், நாட்டிற்கே தமிழ்நாடு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பசுமை எரிசக்தி உற்பத்தியை தமிழ்நாட்டில் மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதே, தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் கனவு. அதனை நினைவாக்கும் வகையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மூலமாக, கூடுதலாக 100 பில்லியன் யூனிட் அளவிலான மின்சாரத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் உற்பத்தி செய்திட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடத்தில் இருந்த போதிலும், மரபுசார மின்சக்தி வருடத்தின் அனைத்து நாட்களிலும் சீராக கிடைப்பதில்லை. அதனால் குறிப்பிடத்தக்க அளவு மரபு சார்ந்த மின் உற்பத்தி அவசியமாகிறது.
அரசு பொறுப்பேற்ற இந்த மூன்றரை ஆண்டுகளின் தமிழ்நாடு தொழில்துறையில் மாபெரும் வளர்ச்சியினைக் கண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுகள் அதிகரித்து வருவதன் காரணமாக ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கியுள்ளது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் மின் தேவை 10% அதிகரித்த வண்ணம் உள்ளது.
இவ்வாறான அத்தியாவசிய தேவையின் அடிப்படையிலேயே உடன்குடி மற்றும் எண்ணூர் ஆகிய இடங்களில் அதி நவீன தொழில் நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது எண்ணூரில் அமைய இருக்கின்ற திட்டம் தமிழ்நாட்டில் உள்ள மின் கட்டமைப்பின் பாதுகாப்பை (Grid Stability) உறுதி செய்ய உதவுவதுடன் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் உறுதுணையாக இருக்கும்.
இனி வரும் காலங்களிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுரைப்படி, பொதுமக்களுக்கும் வேலை வாய்ப்பினை நல்கும் தொழிற்சாலைகளுக்கும் தரமான மின்சாரத்தை நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்யும் வகையில் மரபு சார்ந்த மின் உற்பத்தியுடன் மிக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியும் செய்யும் வகையில் பணிகள் தொடர்ந்து நடைபெறும். இதன் மூலம், தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன், நாட்டிலேயே புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் முதன்மை மாநிலமாகத் திகழும் என்று இவ்வாறு இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.