அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி நேற்று இரவு கவர்னர் ரவி உத்தரவிட்டார்.அந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் கூறி இருந்தார். இந்த பிரச்னை நேற்று இரவோடு இரவாக இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக, அதிமுக தவிர மற்ற அனைத்து கட்சிகளும், சட்ட நிபுணர்களும், பத்திரிகையாளர்களும் அமைச்சர் நீக்கத்தை கண்டித்தனர்.
இந்த நிலையில் நள்ளிரவில் அமைச்சர் நீக்க உத்தரவை கவர்னர் ரவி திடீரென வாபஸ் பெற்றார். இது தொடர்பாக அவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் மூலம் இந்த தகவலை தெரிவித்தார். அதில் கவர்னர் ரவி கூறியிருப்பதாவது:
அமைச்சர் செந்தில்பாலாஜி நீக்கம் தொடர்பாக மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அட்டர்னி ஜெனரலின் கருத்தையும் கேட்பது புத்திசாலித்தனமாக இருக்கும் என்று எனக்கு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி, அட்டர்னி ஜெனரலை அணுகி கருத்து கேட்க உள்ளேன்.. இதற்கிடையில், அமைச்சர் திரு.வி.செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவு, என்னிடம் இருந்து வரும் வரை, கிடப்பில் போடப்படலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.