அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஏறத்தாழ 18 மணி நேரம் அமலாக்கத்துறையினர் அவரை டார்ச்சர் செய்ததால், அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ஆபரேசன் செய்யப்பட்டது. பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதில் சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. அவரை விடுவிக்க வேண்டும் என அவரது மனைவி மேகலா சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதி விசாரித்து, அவர் நீதிபதி பரதசக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார்.
இந்த நிலையில் மேகலா, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் போபண்ணா, எம். எம். சுந்தரேஷ் அமர்வு முன் கடந்த மாதம் 27ம் தேதி விசாரணைக்கு வந்தது.
அமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் செந்தில் பாலாஜி கைதில் சட்டவிதிகள் தவறாக பின்பற்றப்பட்டுள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் கிடையாது என்று கூறினார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கபில்சிபல் வாதத்தை மறுத்தார்.
அதைத்தொடர்ந்து இந்த வழக்கின் வாதம் ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தது. செந்தில்பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
அமைச்சர் செந்தில் பாலாஜி நாட்டை விட்டு பறந்து செல்லக்கூடியவர் அல்ல. அவரிடம் ஒரு நாளில் சிறிது நேரம் விசாரிக்கலாம். செந்தில் பாலாஜியை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. சட்டத்தை மாற்றி அமைக்க நீதிமன்றத்தில் அதிகாரமில்லை. டிவிசன் பெஞ்ச் தீர்ப்புக்கு பிறகு 3வது நீதிபதியை நியமித்தது முற்றிலும் தவறு என்றார்.
இன்று அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர் கூறியதாவது:
கைதுக்கான பல்வேறு காரணங்களை நாங்கள் கூறி விட்டடோம். அமலாக்கத்துறை விசாரணை ஏன் தேவைப்படுகிறது என்பதற்கான காரணங்களையும் கூறிவிட்டோம். கஷ்டடி வழங்காவிட்டால் விசாரணை பாதிக்கப்படும். பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 19ன்படி நாங்கள் கைது நடவடிக்கை மேற்கொள்ளலாம். எனவே செந்தில் பாலாஜியை கஷ்டடிக்கு அனுமதிக்க வேண்டும். தான் தாக்கப்பட்டதாக செந்தில் பாலாஜி கூறினாலும், அதற்கான காயங்களை அவர் நீதிபதியிடம் காட்டவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டாலும் அவர் எங்கள் கஷ்டடியில் இல்லை. அவர் நீதிமன்ற காவலில் உள்ளதால் அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை.
இவ்வாறு துஷார் மேத்தா வாதிட்டார். அத்துடன் வக்கீல்கள் வாதம் முடிந்தது. அதைத்தொடர்ந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கில் விரைவில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.