அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால் ஜாமீன் கேட்டு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் முதன்மை நீதிபதி எஸ். அல்லி முன்பு, செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ முறையீடு செய்தார். ஜாமீன் மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முறையிடப்பட்டபோது, நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றமே விசாரிக்கும். வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அங்கேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம், சிறப்பு நீதிமன்றம்தான் இதுகுறித்து விசாரிக்க முடியும்.. எனவே அங்கே முறையிடுங்கள் என்று அறிவுறுத்தினார்.
இதையடுத்து, செந்தில் பாலாஜி வழக்கறிஞர்கள், சிறப்பு நீதிமன்றத்தை அணுகி, ஜாமீன் கோர வழக்கறிஞர்கள் அருண் மற்றும் பரணிகுமார் ஆகியோர் நீதிபதி ரவி முன்பு முறையிட்டனர். ஆனால் நீதிபதி, அமலாக்கத்துறையின் வழக்கில் தாக்கல் செய்யபட்ட ஜாமீன் மனுவை விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? என்பது சென்னை உயர் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தி வரும்படி அறிவுறுத்தினாா். இதையடுத்து செந்தில்பாலாஜி தரப்பு உயர் நீதிமன்றத்தை நாடியது.
இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞரான என்ஆர் இளங்கோ, ஐகோர்ட்டில் நீதிபதிகள் சுந்தர், சக்திவேல் அமர்வில் முறையிட்டனர். அவர்கள் தலைமை நீதிபதியிடம் செல்லுங்கள் , அவர் ஆலோசனை தருவார் என்றனர். அதைத்தொடர்ந்து நீதிபதி சுரேஷ்குமார் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோவுக்கு தெரிவிக்கப்பட்டது.
எனவே நாளை நீதிதிபதி சுரேஷ்குமாரிடம், அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது.