தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 11 மணி நேரம் அவரிடம் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவரை இரவோடு இரவாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
‘பின்னர் அமைச்சர் தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அவரை செசன்ஸ்
நீதிபதி அல்லி ஆஸ்பத்திரியில் வந்து பார்வையிட்டு அமைச்சரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார். அமைச்சரை கைது செய்தது சட்டவிரோதமானது என அமைச்சரின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அமைச்சரை கைது செய்ததில் சட்டவிதிகள் மீறப்படவில்லை என தீர்ப்பளித்தது. இந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 நாள், அமைச்சரை தங்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, அவரின் நீதிமன்ற காவல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, ஜாமின் மனுவை விசாரிக்க அதிகார வரம்பு இல்லை என சிறப்பு நீதிமன்றம் திருப்பி அனுப்பியது. இதனைத் தொடர்ந்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜாமின் மனுவை அவசர மனுவாக விசாரிக்கக்கோரி, நீதிபதி அல்லியிடம், செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் இளங்கோ முறையீடு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிகிறது.