கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இவரது பெயரை அமைச்சர் கே என் நேரு மற்ற கவுன்சிலர்களிடம் கூறினாலும் கூட இவரும் கோவை பொறுப்பு அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் சாய்ஸ் என்கின்றனர் விபரம் தெரிந்தவர்கள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கோவை மேயராக இருந்த கல்பனா மற்றும் நெல்லை மேயர் சரவணன் ஆகியோர் திடீரென ராஜினமா செய்தனர். கோவை அதிமுக வசமாக இருந்த போது கடந்த உள்ளாட்சி தேர்தலின்போது பொறுப்பு அமைச்சராக இருந்த அதிரடி காட்டி 100 கவுன்சிலர்களில் 96 இடங்களை திமுக கூட்டணி கட்சியினர் கைப்பற்றினார். படித்தவர் மிகவும் சாதாரணமாக குடும்பத்தை சேர்ந்தவர் என்கிற அடிப்படையில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜியின் சிபாரிசின் பேரில் கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயரான கல்பனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. துரதிஷ்டவசமாக அமலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி கடந்த 15 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதோடு மேயரின் கணவர் ஆனந்தகுமார் மீதும் ஊழல் புகார்கள் எழுந்தன. மேலும் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கல்பனாவின் வார்டில் பாஜ அதிக வாக்குகள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இத்தகைய எழுந்ததால் மேயர் கல்பனா ராஜினாமா செய்ததாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். புதிய மேயர் குறித்து ஆலோசிக்க அமைச்சர் நேரு கோவை இன்று வந்ததாக கூறப்பட்டது. ஆனால் சில மணி நேரங்களிலேயே ரங்கநாயகியின் பெயர் வெளியானது. இது குறித்து கோவை திமுக நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுவதாவது.. புதிய மேயராக அறிவிக்கப்பட்ட ரங்கநாயகியுள் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சாய்ஸ் தான். நேரு வரும்போதே ஒரு கவரை எடுத்து வந்தார். கவுன்சிலர்கள் கூட்டத்தில் அந்த கவரை கிழித்து அதில் இருந்த பெயரை மட்டும் வாசித்தார் அவ்வளவு தான். கோவையின் புதிய மேயராக தேர்வாக உள்ள 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, முதல் முறை கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரும் உள்ளாட்சித் தேர்தலின் போது செந்தில் பாலாஜி மூலம் நேரடியாக தேர்வாகி தேர்தலில் நின்றார். எளிய பொருளாதார பின்புலத்தைக் கொண்ட இவர் தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். பல மாஜிக்கள் தங்களது ஆதரவாளர்களை மேயராக்க கடும் முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் செந்தில் பாலாஜியின் சாய்ஸ் ரங்கநாயகிக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடதக்கது. .