கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத் துறை யினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னைபுழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-வது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீதிபதிஆனந்த் வெங்கடேஷ் முன்பு அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்ததால், காவல் நீட்டிப்புக்காக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.17-வது முறையாக அவரது நீதிமன்ற காவலை 31-ம் தேதி (நாளை) வரைநீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.