அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் 14 ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் 2முறை ஜாமீன் மனு தாக்கல் செய்தும் முதன்மை செசன்ஸ் கோர்ட் மனுவை நிராகரித்தது. இந்த நிலையில் கடந்தவாரமும் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஜனவரி 8ம் தேதி பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன் இன்று காலை விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வருவதற்காக விசாரணையை சிறிது நேரத்திற்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது கோபமடைந்த நீதிபதி, ஏற்கனவே இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டும் இதுவரை தாக்கல் செய்யவில்லை. பதில் மனு தாக்கல் செய்ய முடியவில்லை என்றால் எதற்காக வழக்கு தொடருகிறீர்கள் என்று அமலாக்கத் துறைக்கு கேள்வி எழுப்பினார்.
பின்னர் வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது.
அதில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
மாநில காவல்துறை ஒரு நாளைக்கு 120 ஜாமீன் வழக்கில் பதில் தாக்கல் செய்யும் நிலையில், ஒரு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கூறும் காரணம் ஏற்கும் படியில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
இதனையடுத்து ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி அல்லி, நாளைக்கு தள்ளிவைத்தார்