அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டு சென்னை புழல் சிறையில் உள்ளார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவ காரணங்களை காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரினார். நீதிபதிகள் திரிவேதி, சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் முன் இன்று ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அளித்த மருத்துவ அறிக்கையை வாசித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து உள்ளது என மருத்துவ அறிக்கை கூறுகிறது. அமைச்சரின் சகோதரா் தலைமறைவாக இருப்பதால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்படுகிறது என்று வழக்கறிஞர் கூறினார்.
நீதிபதிகள்: நீங்கள் சொல்வது போல எதுவும் சீரியசாக இல்லை. நீங்கள் வழக்கமான ஜாமீன் கோரலாம். மருத்துவ அறிக்கை யில் ஜாமீனுக்கு போதுமான காரணம் இல்லை. எனவே இந்த ஜாமீன் மனுவை வாபஸ் பெறலாம். தகுதி அடிப்படையில் மட்டுமே ஜாமீன் மனு பரிசீலிக்கப்படும். இப்போதெல்லாம் பைபாஸ் அறுவை சிகிச்சை என்பது அப்பன்டிஸ் அறுவை சிகிச்சை போன்றது தான். எனவே கீழமை நீதிமனறத்தில் நீங்கள் வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினார். இதைத்தொடர்ந்து அமைச்சரின் வழக்கறிஞர்கள் ஜாமீன் மனுவை வாபஸ் பெற்றனர். உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் இனி அமைச்சர் சென்னை ஐகோர்ட்டிலோ, அல்லது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திலோ தான் ஜாமீன் மனு தாக்கல் செய்யமுடியும்.