அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். கைது செய்தபோது அமலாக்கத்துறை அதிகாரிகள் செய்த டார்ச்சர் காரணமாக அமைச்சர் உடல் நலம் பாதிக்கப்பட்டார். உடனடியாக அவர் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தனர். பின்னர் காவேரி ஆஸ்பத்திரியில் ஆபரேசன் நடந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு மாற்றினர்.
முதல் கட்ட சோதனையில் பித்தப்பையில் அவருக்கு கல் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு மூளையில் சிறிய கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாகவே அவருக்கு முதுகுதண்டுவலி மற்றும், கால் மறத்து போதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சர் தற்போது சாப்பிடும் மருந்து, மாத்திரை காரணமாக அவருக்கு மூளையில் கட்டி ஏற்பட்டதா, அது என்ன வகையான கட்டி என்பதை ஆய்வு செய்யும் பணியில் மருத்துவர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அவரை இதயவியல், குடலியல், நரம்பியல் மருத்துவர்கள் பரிசோதித்து வருகிறார்கள்.