ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். பின்னர் அமைச்சர் அளித்த பேட்டி.. வருகிற 5ம் தேதி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கோவை மாவட்டம் வருகிறார். அன்று காலை முதல்வரின் 70வது பிறந்தநாளையொட்டி கொடிசியா மைதானத்தில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை நடத்தி வைக்கிறார். 11.30 மணிக்கு வஉசி மைதானத்தில் அரசு விழாவில் பங்கேற்கிறார். 4.30 மணிக்கு கொடிசியா மைதானத்தில் மாட்டு வண்டி பந்தயத்தை தொடங்கி வைக்கிறார். 5 மணிக்கு கோவை புதூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்த விழாவில் கழக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்குகிறார்.
பின்னர் பா.ஜ. தலைவர் அண்ணாமலை குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, அந்த நபர் பற்றிய கேள்வி வேண்டாம் என பல முறை கூறி உள்ளேன். தமிழ்நாட்டில் பா.ஜ. உறுப்பினர்கள் எத்தனை பேர் என கேட்டு சொல்லுங்கள் என கேட்டேன். நீங்கள் கேட்டு சொல்லவில்லை. வாட்ச்க்கான பில் கேட்டேன். பில் தரல. வாக்காளர்களுக்கு பரிசு பொருள் கொடுத்ததாக கூறி உள்ளார். நீங்கள் கூறிய அந்த நபர் அரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களுக்கு ரூ.1000 கொடுத்தும் எடுபடல. நீங்கள் அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு ரூ.1000 கொடுத்தீர்களா , இல்லையா என நீங்கள் கேள்வி கேட்டு சொல்லுங்கள். நான் கேட்ட எந்த கேள்விக்கும் அவர் பதில் கூறவில்லை. அவர் தன் இருப்பை காட்டிக்கொள்ளவும், இல்லாத ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கவும் இப்படியெல்லாம் பேசுகிறார். அவரது முயற்சிக்கு நீங்கள் துணை போக வேண்டாம். மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. நேற்று ஒரு கருத்தை சொன்னார். அவர் மொடக்குறிச்சி தேர்தலில் என்ன கொடுத்தார் என்பதை நினைத்து பார்த்து பேச வேண்டும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.