Skip to content
Home » கோவை டைடல் பார்க் 5ம் தேதி முதல்வர் திறக்கிறார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

கோவை டைடல் பார்க் 5ம் தேதி முதல்வர் திறக்கிறார்….. அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  வரும்  5 மற்றும் 6 தேதிகளில் கோவையில் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார்.   இதையொட்டி தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் மற்றும் கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர்  செந்தில்பாலாஜி, விளாங்குறிச்சியில் உள்ள ஐடி பார்க், காந்திபுரம் மத்திய சிறை வளாகத்தில் அமைய உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:

2021ல் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் அவர்கள் அதிகம் முறை  சுற்றுப்பயணம் வந்தது கோவை மாவட்டம் தான். அந்த அளவுக்கு மாவட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.  வருகிற 5, 6ம் தேதிகளிலும் முதல்வர் கோவை மாவட்டத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

விளாங்குறிச்சியில் எட்டு தளங்களுடன் 300கோடி  ரூபாய் மதிப்பீட்டில் 2,98,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய தொழில்நுட்ப பூங்காவை  வரும் ஐந்தாம் தேதி முதல்வர்  திறந்து வைக்கிறார்.  இதில் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பது வரக்கூடிய நாட்களில் தான் தெரியவரும். அதைத்தொடர்ந்து  திராவிட மாடல் அரசின்   திட்டங்கள் குறித்து முதல்வர் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

ஆறாம் தேதி காந்திபுரம் பேருந்து நிலையம் முன்பிருக்கும் மத்திய சிறைச்சாலை மைதானத்தில், கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவியல்  மையத்தற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஏழு தளங்களுடன் ஒரு லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் இந்த நூலகம் அமைகிறது. நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி எதுவும் இடம்பெறவில்லை.

கோவையில் நடைபெற்ற மூன்று  மாவட்ட  திமுக செயற்குழு கூட்டத்தில், நாங்கள் பேசாத கருத்துக்களை எல்லாம் ஒரு நாளிதழ் வெளியிட்டுள்ளது. தவறான கருத்துக்களை மக்களிடையே பரப்ப வேண்டாம் .  ஏதாவது சந்தேகம் இருந்தால் என்னிடமே கேட்டு இருக்கலாம். இனி வரக்கூடிய நாட்களில் அப்படி செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், துணைமேயர் வெற்றிச்செல்வன், கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக்  வடக்கு மாவட்ட செயலாளர் தொஅ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!