அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு இருதய ஆபரேஷன் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தனர். இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னை காவேரி ஆஸ்பத்திரியில் பைபாஸ் ஆபரேஷன் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனால் அந்த ஆஸ்பத்திரியில் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் மாலை 3.30 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அதைத்தொடர்ந்து திமுக வழக்கறிஞர்கள், அமலாக்கத்துறை வழக்கறிஞர்களும் அங்கு வந்தனர். அப்போது அமைச்சர்கள் மா.சு. , சேகர்பாபு ஆகியோரும் இருந்தனர்.
திமுக வழக்கறிஞர்கள் , நீதிபதி அல்லியிடம் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில் நாளை அமைச்சருக்கு பைபாஸ் ஆபரேசன் நடக்க உள்ளது. எனவே அவரை கைது செய்யக்கூடாது. ஜாமீன் வழங்கவில்லை என்றால் ஆபரேசன் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என கோரி இருந்தனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே இங்கு வந்தேன். உங்கள் வாத, பிரதிவாதங்களை கோர்ட்டில் வைத்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு ஜூன் 28ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்து அவர் புறப்பட்டு சென்றார்.