அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்தது சட்டப்படி தவறானது. அவரை விடுவிக்க வேண்டும் என செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபலும் ஆஜராகி வாதாடினர். அவர் தனது வாதத்தில் கூறியதாவது:
பி.எம்.எல்.ஏ. சட்டப்பிரிவில் ஒருவருக்கு நோட்டீஸ் அனுப்பி அழைத்து விசாரிக்கலாம். சந்தேகத்தின் பேரில் யாரையும் கைது செய்ய முடியாது. கைது செய்வதற்கு ஆதாரங்கள் வேண்டும். மேலும் காவல் துறை போல, காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை. தாங்கள் போலீசார் இல்லை என்று கூறிய அமலாக்கத்துறையினர் பின்னர் அதையே மறுக்கிறார்கள். ஏமாற்றி பெற்ற பணத்தில் நகை, சொத்து வாங்கினால் தான் அது பண மோசடியாகும். (இதற்கு ஆதாரமாக விஜய் மதன் லால் வழக்கை கபில்சிபல் மேற்கோள் காட்டினார்). விரிவான வாதங்களை முன் வைக்க தனக்கு மேலும் ஒரு நாள் அவகாசம் வேண்டும்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தங்களுக்கு கைது செய்யும் அதிகாரம், காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் இருப்பதாக கூறினார். தொடர்ந்து வாதங்கள் நடக்கிறது.