தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை , கரூர், இல்லங்களில் நேற்று காலை 7 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். அப்போது சென்னையில் நடைபயிற்சி சென்றிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை வீட்டுக்கு வரவழைத்தனர். உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அவரிடம் இருந்த செல்போனை அதிகாரிகள் பறித்துக்கொண்டனர். இரவு வரை அங்கேயே அவரை வைத்திருந்தனர். குளிக்கவோ, உடை மாற்றுவதற்கோ, இயற்கை உபாதைகளுக்கோ அவரை அனுமதிக்கவில்லை. குறிப்பாக தண்ணீர் குடிக்க கூட அனுமதிக்கவில்லை .
இரவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து செல்வதாக கூறினர். நுங்கம்பாக்கத்திற்கோ, அல்லது கும்மிடிப்பூண்டியில் உள்ள மத்திய உளவுத்துறை பாதுகாப்பு இல்லத்திற்கோ அழைத்து செல்ல முடிவு செய்தனர்.
அப்போது தான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. எனவே விசாரணை என்ற பெயரில் அமைச்சரை அமலாக்கத்துறையினர் கடுமையாக தாக்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.
பொதுவாக அமைச்சர் செந்தில் பாலாஜி மிகவும் தைரியமான , உறுதியான மனம் படைத்தவர். இறைபக்தி மிகுந்தவர். எந்த நிலையிலும் அவர் கண்கலங்கமாட்டார். ஆனால் அவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரும்போது கண்ணீர் விட்டு அழுதார். தொடர்ந்து அவர் மார்பை பிடித்துக்கொண்டு கண்ணீர் சிந்தினார். ஆனாலும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்து அமைச்சரை சித்ரவதைக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது.
இன்று அதிகாலை 2 மணி அளவில் அமைச்சர் மயக்கமடையும் நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன அமலாக்கத்துறையினர், இனியும் இங்கு வைத்திருந்தால் நிலைமை விபரீதமாகிவிடும் என பயந்துபோய், அவரை ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு ரத்த அழுத்தம், இசிஜி சோதனை செய்யப்பட்டது. அவரது இதயத்துடிப்பு சீராக இல்லை என்றும், அவர் மயக்க நிலையில் இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர். உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சையை தொடங்கினர். அவருக்கு உள்நோயாளிகளுக்கான உடைகள் கொடுக்கப்பட்டு, ஆஞ்சியோ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மருத்துவமனைக்கு வந்தனர்.
அமலாக்கத்துறையினரின் கடுமையான தாக்குதல் காரணமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் தான் முதல்வரின் அறிக்கையும் அமைந்துள்ளது. அதாவது உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்று முதல்வர் ஸ்டாலின் தனது கண்டன அறிக்கையில் கூறி உள்ளார். உடல் ரீதியான தொல்லை என முதல்வர் குறிப்பிட்டது, அமைச்சர் தாக்கப்பட்டதைத்தான் இப்படி கூறி உள்ளார் எனதிமுக நிர்வாகிகள் கூறுகிறார்கள்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்
தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன்.
தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான ரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள்.
விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது. நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள்.
நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.
அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது.
என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார் என்று அறிக்கையில் கூறி உள்ளார்.