அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக்கோரி அவரது மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த 3-வது நீதிபதி செந்தில் பாலாஜி கைது சட்டப்படியானது, அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து வருகிற 26-ந்தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்று காவேரி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனே நீதிமன்ற உத்தரவுப்படி செந்தில் பாலாஜி உடனடியாக புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், அமலாக்கத்துறை காவலை அனுமதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.