கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில் உயர்கல்வித்துறை பங்களிப்போர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டம் இன்று மாலை வரை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் தலைமை உரை ஆற்றிய அமைச்சர், தான்ன் பொறுப்பேற்றதிலிருந்து முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு இந்த உயர்கல்வி துறையை இன்னும் உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி சென்னை, கோவை, மதுரை, திருச்சி என 4 மண்டலங்களாக பிரித்து நான்கு பகுதிகளிலும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழகங்களின் உறுப்புக்கல்லூரிகள் கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரி அரசு உதவி பெறும் கல்லூரி சுயநிதி கல்லூரி என உயர்கல்வி துறையின் அனைத்து அம்சங்கள் அடங்கிய அனைத்து நிர்வாகங்களின் அதிகாரிகள் அலுவலர்கள், பெற்றோர், ஆசிரியர், மாணவர்கள் என அனைவரின் கருத்துகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்து இந்தத் துறையை இன்னும் சிறப்பாக வழிநடத்த வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கூட்டத்தை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
கோவை மாவட்டம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதில் சென்னைக்கு அடுத்தபடியாக இருப்பதாக தெரிவித்தார். முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு அனைத்து துறைகளும் உச்சகட்டத்தில் இருந்தாலும் கூட உயர்கல்வி துறையை இன்னும் உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற முதல் அமைச்சரின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற வகையில் இதனை நடத்தி வருவதாக கூறினார். இந்திய அளவில் தமிழகத்தின் உயர் கல்வித் துறை 47% யை தாண்டி இருப்பதாகவும் அகில இந்திய அளவில் இந்தியாவின் உயர்கல்வி 28% என குறிப்பிட்ட அமைச்சர்
ஒன்றிய அரசின் எதிர்பார்ப்பு என்னவென்றால் 2030 ஆம் ஆண்டு 50% எட்ட வேண்டும் என்பதுதான் எனவும் எனவே ஒன்றிய அரசு 2030 நோக்கி செல்கிறது ஆனால் தமிழ்நாடு இன்றைய தினமே 47 % தாண்டி விட்டது என்றால் உச்சத்தில் இருக்கின்ற துறை உயர் கல்வித்துறை என தெரிவித்தார்.
ஆசிரியர்கள் ஆசிரியர் பணி இல்லாத கல்வி அதிகாரிகள், தாளாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டவர்களை இந்த அமர்விற்கு வரவழைத்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என கருத்துக்களை கேட்டறிய உள்ளதாகவும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர்கல்வி துறையில் என்னென்ன இடர்பாடுகள் உள்ளது என்பது குறித்தும் கேட்டறிய உள்ளதாகவும் மாணவர்களின் பெற்றோர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிய உள்ளதாக தெரிவித்தார்.
நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்று பயனடைந்தவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள் அவர்களின் கருத்துக்கள் என்ன என்பது குறித்து கேட்டறிந்து அதற்கு தகுந்தார் போல் நடவடிக்கைகள் மேற்கொண்டு இந்த துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக தான் இந்த கலந்தாலோசனை கூட்டம் நடைபெறுகிறது என தெரிவித்தார். இக்கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர், உயர் கல்வித் துறை அதிகாரிகள், அலுவலர்கள் பல்வேறு கல்லூரி அதிகாரிகள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்