ஆந்திர மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் முதலமைச்சர் ஜெகன்மோகன் குறித்து அவதூறாக பேசி வருகிறார். அவரால் வார்டு உறுப்பினராக கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சர் ஜெகன்மோகனை விமர்சித்து பேசி வருகிறார். எங்கள் கட்சிக்கு 22 எம்.பிக்கள், 151 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பவன் கல்யாண் போட்டியிட்ட 2 இடங்களிலும் தோல்வி அடைந்தார். ஜெகன்மோகன் ரெட்டியுடன் பவன் கல்யாண் ஒப்பிட முடியாது.
கடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி 88 சதவீத இடங்களில் வெற்றி பெற்றது. ஜனசேனா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் 120 பேர் டெபாசிட் இழந்தனர். முதலமைச்சரின் அந்தஸ்தை வைத்து பேச வேண்டும். பவன் கல்யாண் பவர் ஸ்டார் இல்லை. பிறருக்காக வேலை செய்யும் ஒரு பேக்கேஜ் ஸ்டார். சந்திரபாபு நாயுடு ஜெயிலில் இருப்பதால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் கட்சியுடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டு பெரிய பேக்கேஜை பெற்றுவிட்டார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியுடன் போருக்கு தயார் என பவன் கல்யாண் தெரிவித்து இருக்கிறார். போர்க்களத்தில் நுழையும் அளவுக்கு அவரிடம் அவ்வளவு வீரர்கள் இருக்கிறார்களா? இவ்வாறு அவர் கூறினார்.