சென்னையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் திமுக எம்பி பி.வில்சன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அமைச்சர் ரகுபதி கூறியதாவது… முன்பெல்லாம் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகளை வரிசையாகக் களமிறக்கி விட்ட பாஜக அரசு, தமிழகத்தில் திமுக அரசைக் களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு NCB-ஐக் களத்தில் இறக்கிவிட்டு இருக்கிறது. NCB விசாரணை அமைப்பினுடைய துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் டில்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார். ஒரு விசாரணை அமைப்பின் துணை இயக்குநர் புலன் விசாரணை முழுமையாக நடைபெறாமலேயே பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கின்றார். விசாரணை முழுமையாக முடிந்த பிறகு சந்திக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே திமுகவைக் கொச்சைப்படுத்தி விட வேண்டும் என்பதற்காகப் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். அதன் மூலமாக ஏதாவது அரசியல் ஆதாயம் அடைய முடியுமா? என்று தப்புக்கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜாபர் சாதிக் மீது பிப்ரவரி 15-ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பி, தேடப்படும் குற்றவாளி என அறிவித்திருக்கிறார்கள். பிப்ரவரி 21-ஆம் தேதி மங்கை என்ற திரைப்பட விழாவில் அவர் கலந்து கொண்டு இருக்கின்றார். அப்போது உங்களுடைய NCB எங்கே போனது? 2013-ஆம் ஆண்டிலேயே ஜாபர் சாதிக் மீது ஒரு வழக்கு வந்தது, அன்றைக்கு அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. ஒழுங்காக அந்த வழக்கையும் நடத்தவில்லை. அன்றைக்கு ஜாபர் சாதிக்குக்காக வழக்கினை நடத்தியவர் பாஜகவினுடைய வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால் கனகராஜ். ஜாபர் சாதிக்கைக் காப்பாற்றியது அதிமுக ஆட்சியிலேதான் நடந்தது. திமுகவில் இரண்டு கோடி பேருக்கு மேல் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். வருகின்றவர்களை எல்லாம் சோதித்துப் பார்த்துக் கட்சியில் சேர்க்க முடியாது, அதே நேரத்தில் அவர்கள் தவறு செய்திருக்கிறார்கள் என்று தெரிந்தால் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தேர்தல் வருகின்றபோது ஏதாவது பொய்யான குற்றச்சாட்டை திமுக மீது சுமத்தி விட முடியாதா? என்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறது மத்திய அரசு. அவர்களுக்கு ஒன்றை ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறோம், தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. திமுக என்றுமே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாது. அதற்குத் துணை போகிறவர்கள் யாரையும் வைத்துக்கொள்ள மாட்டோம் என உறுதிபட கூறுகிறோம். எங்கள் மீது பழி போடுகிறவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறோம். NCB-தான் முழுப் பொறுப்பு, NCB தமிழகத்தில் ஏதாவது பிடித்தார்களா? ஜாபர் சாதிக் பற்றி சொல்கிறபோது டில்லியிலும், வேறு மாநிலத்திலும்தான் போதைப்பொருள் பிடிக்கப்பட்டு இருக்கிறது, தமிழகத்தில் கிடையாது.