நாகையில் இன்று மிலாது நபி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.நாகை அனைத்து ஜமாத்தார்கள் சார்பில் நடைபெற்ற மிலாது நபி ஊர்வலத்தினை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கொடி அசைத்து துவங்கி வைத்தார் .அதனைத் தொடர்ந்து மதராசா பள்ளி மாணவ மாணவிகள் நபிகள் நாயகத்தின் பொன்மொழிகளையும் திருப்பாடல்களை பாடி ஊர்வலமாக சென்றனர். நாகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்ற மதராசா பள்ளி மாணவ மாணவிகளை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் நின்றிருந்த இஸ்லாமியர்கள் அவர்கள் மீது பூக்களை தூவி அவர்களுக்கு பிஸ்கட் சாக்லேட் உள்ளிட்ட பரிசு பொருட்களை வழங்கி கௌரவித்தனர். அப்போது கேரள கலைஞர்களின் கோலாட்டம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஒரு நபருக்கு பிறந்த நாளும், இறந்த நாளும் ஒன்றாக வருவது இல்லை. அவ்வாறு வந்தால் அவர் இறைவனுக்கு சமமாக கருதப்படுவார்கள். அப்படியான பாக்கியத்தை பெற்றவர் தான் நபிகள் நாயகம். அவருக்கு தான் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது என்றார். மேலும் இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் அனைத்து மதத்தினரும் அண்ணன் தம்பி போல் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு காரணம் தமிழகத்தில் திமுக ஆட்சிதான் என்றும் பெருமிதத்துடன் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகூர் தர்கா பரம்பரை, கலிபா மஸ்தான் சாகிபு உள்ளிட்ட அனைத்து ஜமாத்தார்கள் இதில் திரளாக கலந்து கொண்டனர்.