நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற் றுகிறார். மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல்கட்ட கூட்டத்தொடர் பிப்ரவரி 13-ம்தேதி வரை நடைபெறும். 2-ம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 10-ல் தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதியுடன் நிறைவடையும். இன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். பின்னர் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (பிப்.1) தாக்கல் செய்கிறார். இதன்மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதி அமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பிப்ரவரி 3, 4, 5-ம் தேதி களில் நடைபெறும்.
மாத சம்பளதாரர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படலாம். புதிதாக 2 வரிப் பிரிவுகள் சேர்க்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. பட்ஜெட்டில் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடும் வகையில் மூலதன செலவினத்துக்கான ஒதுக்கீட்டை 20 சதவீதம் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் மக்களின் செலவிடும் வருவாய் அதிகரிக்கும் என்பதுடன், அது பொருளாதார சுழற்சிக்கு வித்திடும் என்பது அரசின் மதிப்பீடாக உள்ளது. 2026 மார்ச் இறுதிக்குள் நிதி பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக கட்டுக்குள் வைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்படலாம் என்று யர்னஸ்ட் யங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.