மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், டில்லியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தென் மாவட்ட வெள்ளத்தை தடுக்க மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. தேசிய பேரிடா் மீட்புபடை செல்லும் வரை அங்கு மாநில அமைச்சர்களோ, அதிகாரிகளோ வரவில்லை. பேரிடர் ஏற்பட்டபோது தமிழக முதல்வர் டில்லியில் இருக்கிறார். டில்லியில் இருந்து கொண்டு மத்திய அரசை குறைகூறுவதை ஏற்க முடியாது.
தேசிய பேரிடர் என அறிவிக்கும் நடைமுறை மத்திய அரசில் இல்லை. சென்னை வானிலை மையம் அதி நவீனமானது. முன்னெச்சரிக்கை சரியாக கிடைக்கவில்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் கனமழை குறித்த அப்டேட்டை வானிலை ஆய்வு மையம் கொடுத்தது. தமிழக வெள்ளத்திற்குஉடனே உதவிய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நன்றி.
2015 வெள்ளத்தில் அம்பத்தூர் தொழில்பேட்டை பாதிக்கப்பட்டது. இப்போதும் அந்த தொழில்பேட்டையில் வெள்ளம் புகுந்தது. 2015 வெள்ளத்தில் இருந்து தமிழக அரசு என்ன பாடம் கற்றுக்கொண்டது.
சென்னையில் மழை நீர் வடிகால் பணி 92 சதவீதம் முடிந்து விட்டதாக கூறிய அமைச்சர், இப்போது 42 சதவீதம் தான் முடிந்து விட்டது என்கிறார். 42 சதவீதம் கூட முடிந்து இருக்கிறதா என்பதில் சந்தேகம் வலுக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். இந்த பேட்டிக்கு முன்னதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நிர்மலா சீத்தாராமனை சந்தித்து பேசினார்.