கோவையில் தனியார் மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் பொறுப்பு அமைச்சர் முத்துச்சாமி தலைமையில் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி, செந்தில் பாலாஜி கட்சியிலும், ஆட்சி பணிகளிலும் சரியான வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார். பல நல்ல திட்டங்கள் செயல்படுத்த அவர் வழிவகை செய்துள்ளார். கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடையவும், தடையில்லாமல் வளர்ச்சிப் பணிகள் நடக்கவும் ஏற்பாடு செய்வோம்.
டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்கக்கூடாது என தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக பணம் வாங்குவதை முழுமையாக ஒழுங்கு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாடகை பிரச்சனை, பாட்டில் சேதம், மின்கட்டணம் போன்ற தொழிலாளர்களுக்கான பிரச்னைகளை தீர்த்து, இத்தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மகளிர் ஆயிரம் ரூபாய் பெற சொல்லப்பட்டுள்ள விதிமுறைகளில் எதுவும் தவறு என சொல்ல முடியாது. இதில் தவறு இருப்பதாக பாஜகவினர் சொல்வது அரசியல். தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது. அங்கு பணியாற்றிய பணியாளர்கள் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை ஆயுதமாக பயன்படுத்த திமுக நினைக்கவில்லை. அதனை சட்டபூர்வமாக சந்திக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயல்களால் ஒன்றிய அரசு திமுக வெற்றியை சீர்குலைக்க நினைத்தால், திமுகவிற்கு அது இரண்டு மடங்கு வெற்றியை கொடுக்கும் என தெரிவித்தார்.