Skip to content
Home » வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்… அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்பு…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், கூடுதல் ஆட்சியர்(வளர்ச்சி) மு.ஷபீர் ஆலம் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள், திட்டப் பணிகளின் தற்போதைய நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் செய்தியாளர்களிடம் கூறியது: பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அனைத்துப் பணிகளும் சிறப்பான வகையில் 90 சதவீதத்துக்கும் மேலாக நிறைவுற்றிருக்கிறது. குறுவை சாகுபடி 39 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு, 26 ஆயிரம் ஹெக்டேருக்கு மேலாக அறுவடை முடிந்துள்ளது. சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் கையிருப்பில் உள்ளன. விவசாயக் கடன் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பருவமழையை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் பெரும்பாலும் கொண்டு செல்லப்பட்டுவிட்டன. மீதம் உள்ள குறைந்த அளவிலான மூட்டைகளும் விரைந்து உரிய இடங்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படும். மாவட்டத்தில் எந்த இடத்திலும் நெல் மூட்டைகள் தேங்கியிருக்கும் நிலை இல்லை. மாவட்டத்தில் இன்னும் தண்ணீர் சென்றடையாத பகுதிகளுக்கும், நீர் நிலைகளுக்கும் தண்ணீர் சென்றடைவதற்கான செயல்பாடுகளை பொதுப்பணித்துறயினர் மேற்கொண்டுள்ளனர்.

விவசாயிகளுக்கு 2023-24-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை விடுபட்ட கிராமங்களுக்கு, அடுத்தக்கட்டமாக கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஆட்சியர் மேற்கொண்டுள்ளார். மயிலாடுதுறையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்துக்குள் செல்லும் வகையில் சாலை அமைப்பதற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றார். மயிலாடுதுறையில் மாவட்ட மைய நூலகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டும், இன்னும் பணிகள் தொடங்கப்படாதது குறித்து கேட்டதற்கு, இது குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள இடம் ஒப்படைக்கப்பட்டு விரைவில் நூலக கட்டிடப் பணிகள் தொடங்கப்படும் என்றார். முன்னதாக பல்வேறு அரசு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். 2023-24-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகை ஒரு சில கிராமங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ளதாகவும், பெரும்பாலான கிராமங்களுக்கு கிடைக்கவில்லை, இழபீட்டுத் தொகை மற்ற கிராமங்களுக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அமைச்சரை சந்தித்து முறையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!